ஹார்லி - டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள, புதிய பைக்கிற்கான முன்பதிவு ஆகஸ்ட் 3ம் தேதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்லி - டேவிட்சன் X440:
சொகுசு இருசக்கர வாகனங்களுக்கு பெயர்போன ஹார்லி - டேவிட்சன் நிறுவனம், முதன்முறையாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து புதிய மாடல் இருசக்கர வாகனத்தை உருவாக்கியுள்ளது. ஹார்லி - டேவிட்சன் X440 என பெயரிடப்பட்டுள்ள இந்த வாகனம், கடந்த 3ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
முன்பதிவு தீவிரம்:
வாகனம் அறிமுகமானது முதலே இதற்கான முன்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹார்லி - டேவிட்சன் X440 வாகனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஆகஸ்ட் 3ம் தேதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கான சோதனை ஓட்டம் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விநியோகம் எப்போது?
விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ரூ.5000 செலுத்தி வாகனத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்த தேதிகளின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு, அக்டோபர் மாதம் முதல் ஹார்லி - டேவிட்சன் X440 வாகனங்களின் விநியோகம் தொடங்கும் என ஹீரோ மோட்டோகார்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நீம்ரனா பகுதியில் உள்ள ஹீரோ கார்டன் தொழிற்சாலையில், புதிய ஹார்லி - டேவிட்சன் X440 வாகன உற்பத்தி வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட உள்ளது.
இன்ஜின் விவரம்:
தற்போது, இந்தியாவில் ஹார்லி - டேவிட்சன் X440 விலையானது டெனிம் வேரியண்டின் விலை ரூ.2.29 லட்சத்தில் தொடங்குகிறது மற்றும் டாப்-ஸ்பெக் எஸ் வேரியண்டின் விலை ரூ.2.69 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Harley-Davidson X440 ஆனது 440 cc சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு, 2-வால்வ் பெட்ரோல் இன்ஜின் ஆகும், இது 26HP மற்றும் அதிகபட்சமாக 38Nm முறுக்குவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இது 6 ஸ்பீட் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்லிப்பர் கிளட்ச்சையும் பெற்றுள்ளது.
விலை உயர வாய்ப்பு:
அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஹிரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹார்லி - டேவிட்சன் X440-க்கான இரண்டாம் கட்ட முன்பதிவு எப்போது தொடங்கும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், இரண்டாம் கட்ட முன்பதிவு தொடங்கும்போது, ஹார்லி - டேவிட்சன் X440-ன் விலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI