தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், 4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். 


ஜெயிலர் படம் ரிலீஸ் 


ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படம்  நாளை (ஆகஸ்ட் 10) வெளியாகவுள்ளது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, ஜீவிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஜெயிலர் படம் வெளியாகவுள்ளது.


ரஜினியின் இமயமலை பயணம் 


இதனிடையே நடிகர் ரஜினிகாந்திற்கு சினிமாவை தாண்டி ஆன்மிகம் மேல் அளவுக்கடந்த நம்பிக்கை உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக தனது ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு இமயமலை செல்வது ரஜினியின் வழக்கம். ரஜினி ஆன்மீக சிந்தனை தான் அவருக்கு பிற நடிகர்களின் ரசிகர்களையும் பெற்றுக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். ஆனால் கடைசியாக அவர் 2019 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவதாக சொன்ன சமயத்தில், தர்பார் பட ஷூட்டிங் முடிந்தபின் இமயமலை சென்றிருந்தார்.


அதன்பிறகு கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல காரணங்களால் ரஜினி செல்லவில்லை. இம்முறை அவர் நடித்த ஜெயிலர், லால் சலாம்  படங்களின் ஷூட்டிங் அடுத்தடுத்து முடிந்தது. ஆனால் நடுவே ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா தேதி குறிக்கப்பட்டதால் அவர் உடனடியாக இமயமலை செல்லவில்லை. இடையில் பாலி தீவுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் ஜெயிலர் படத்தை நேற்று ஸ்பெஷலாக சன் டிவி அலுவலகத்தில் ரஜினி பார்த்ததாக சொல்லப்பட்டது. 


சிரிப்பு மட்டுமே பதில்


இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டு சென்றார். அங்கு அவர் ஒரு வாரம் இருப்பார் எனவும், அங்குள்ள புனித தலங்களுக்கு செல்வார் எனவும் கூறப்படுகிறது. எப்போது தன்னுடன் மகள்களில் ஒருவரை உடன் அழைத்து செல்லும் ரஜினி இம்முறை தனியாக செல்வதாக சொல்லப்படுகிறது. இதனை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், “இமயமலைக்கு 4 ஆண்டுகளுக்கு பின் செல்கிறேன். கொரோனாவால் போக முடியவில்லை. ஜெயிலர் படம் எப்படி இருக்கிறது என்பதை நீங்களே பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என வழக்கமான தனது சிரிப்புடன் பதிலளித்து விட்டு சென்றார். ரஜினியின் இமயமலை பயணம் என்பது அவரது ரசிகர்களுக்கு எப்போதும் முன்மாதிரியான ஒன்றாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Rajinikanth: ’ரஜினி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க?’ .. போயஸ் கார்டன் வீட்டுக்கு நள்ளிரவில் தனியாக வந்த சிறுமி