கனவு காணும்போது இருக்கும் சந்தோசம் நனவாகும்போது இருக்காது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள நேர்காணல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் தன்னுடைய 74வது வயதிலும் முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்துக்குப் பின் அடுத்ததாக வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் கூலி படத்தில் ரஜினி நடிக்கிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். 


இப்படியான நிலையில் ஆன்மீக விஷயங்களில் அதிகம் நாட்டம் கொண்டவர் ரஜினிகாந்த். ஒவ்வொரு படம் ஷூட்டிங் முடிந்த பிறகும் இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் கூட இமயமலை சென்று வந்தார். தொடர்ந்து பிரதமர் மோடி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.


இதனிடையே வெளியே எங்கு சென்றாலும் மேக்கப், விக் என எதுவும் இல்லாமல் இயல்பான நபராகவே வலம் வருவார். ரஜினி எளிமையானவர் என பலரும் சொல்கிறார்கள். ஆனால் தான் எளிமையானவன் என எதை வைத்து சொல்கிறீர்கள் என ரஜினியே ஒரு நேர்காணலில் கேள்வி எழுப்பியிருப்பார்.


 






அந்த நேர்காணலில் உங்களுடைய முதல் படத்துக்கான கட் அவுட்டை கண்ட போது எப்படி இருந்தது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, என்னுடைய முதல் படத்துக்கான கட் அவுட் பற்றிய கனவு கண்ட போது இருந்த சந்தோசம், அது நனவாகும் போது இல்லை. அது திருமணம், பெயர், பணம் உள்ளிட்ட எல்லா விஷயத்திலும் காணலாம். எல்லாம் மாயை தான் என ரஜினி தெரிவித்தார். 


இதனைத் தொடர்ந்து எல்லாமே மாயை தான் என நினைப்பதால் தான் எளிமையாக இருக்கிறார்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “எளிமை என்றால் எதை சொல்கிறீர்கள் என தெரியவில்லை. நான் போறது BMw கார். வீடு போயஸ் கார்டனில் உள்ளது. சாப்பிடுறது எல்லாம் ஃபைவ் ஸ்டார், செவன் ஸ்டார் ஹோட்டலில் தான். இதுல எப்படி எளிமை வருதுன்னு புரியல. உடை உடுத்துவதில் மட்டும் எளிமை வந்துவிட்டதா என தெரியவில்லை” என ரஜினி தெரிவித்திருப்பார்.