நடிகர் ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் படத்தை தீபாவளிக்கு ஒளிபரப்ப உள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 1997 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம் ‘அருணாச்சலம்’. இந்த படத்தில் சௌந்தர்யா, ரம்பா, அம்பிகா, மனோரமா, ரகுவரன், விசு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ப்ரூஸ்டர்ஸ் மில்லியன்ஸ் என்ற ஆங்கில நாவல் ஏற்படுத்திய தாக்கத்தில் ரஜினி இப்படத்தை விரும்பியதாக கூறப்படும் நிலையில், சினிமா துறையில் பல்வேறு காலகட்டத்தில் தனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு உதவி செய்ய ரஜினி தயாரித்து நடித்திருந்தார்.
ரஜினி தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மிகப்பெரிய கோடீஸ்வரரான வேதாச்சலம் தன் மகனுக்கு பணத்தின் மீது ஆசை இருக்கக்கூடாது என்ற காரணத்துக்காக 30 நாட்களில் ரூ.30 கோடி செலவு செய்ய வேண்டும் என தெரிவித்து வித்தியாசமான நிபந்தனைகளை விதிக்கிறார். இந்த சவாலில் ரஜினி வென்றாரா என்பதே இப்படத்தின் கதை.
கிரேஸி மோகன் அருணாச்சலம் படத்திற்கு வசனம் எழுத, ரஜினி படத்தை இயக்க வேண்டும் என்ற ஆவலுக்காகவே சுந்தர்.சி இயக்குநரானார். படத்தின் அறிமுக காட்சியே பட்டையை கிளப்பும். பின்னணியில் ஒலிக்கும் ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ என்ற ஒலியும் நம்மை அப்படியே புல்லரிக்க வைக்கும். எஸ்.பி.பி. பாடிய அதாண்டா இதாண்டா என்ற ஓப்பனிங் பாடல் இன்றைக்கும் பலரது பேவரைட் ஆக உள்ளது.
மேலும் மாத்தாடு மாத்தாடு, நகுமோ, சிங்கம் ஒன்று, தலை மகனே ஆகிய பாடல்களும் தேவாவின் இசையில் தேனிசையாக அமைந்தது. இதில் சிங்கம் ஒன்று புறப்பட்டதே பாடலை ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்காக எழுதப்பட்ட பாடலாகவே பார்க்கப்பட்டது. படத்திலும் அரசியல் குறித்தும் வழக்கம்போல ரஜினி பேசியிருப்பார். 1996 ஆம் ஆண்டு தேர்தலில் ரஜினி திமுக கூட்டணிக்கு ஆதரவு குரல் கொடுத்தார். மனோரமா அதிமுகவுக்கு ஆதரவாக களமிறங்கி ரஜினியை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனால் பட வாய்ப்பின்றி தவித்த மனோரமாவுக்கு ரஜினி அனைத்தையும் மறந்து இப்படத்தில் வாய்ப்பு கொடுத்தார். இப்படியான பல சிறப்புகள் வாய்ந்த அருணாச்சலம் திரைப்படம் கடந்த சில ஆண்டுகளாகவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகாமல் இருந்தது. இதனை ஒளிபரப்புமாறு சன் டிவியிடம் சமூக வலைத்தளம் வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தற்போது அருணாச்சலம் படத்தின் ஒளிபரப்பு உரிமை புதுப்பிக்கப்பட்டு தீபாவளி தினமான அக்டோபர் 24 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.