கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூடுதல் அலுவலக கூட்டரங்கில் நேற்று பள்ளி கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12ம் வகுப்பு முடித்து உயர்கல்வி தொடராத மாணவர்களை ஊக்கப்படுத்தி, உயர்கல்வி தொடர்வதற்கான உயர் கல்வி வழிகாட்டல் மூலம், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபு சங்கர்  தலைமையில் நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத நிகழ்ச்சி தமிழக முதலமைச்சர் ஆணைக்கு இனங்க, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வைத் துறை அமைச்சரின் வழிகாட்டுதலோடு, இந்த உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 12ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு உயர்கல்வி தொடராமல் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய செய்தியாக இருக்கிறது. உங்களுக்கு உள்ள சூழ்நிலைகள், பொருளாதார பிரச்சினைகள், ஆர்வமின்மை உள்ளிட்ட காரணங்களை கலைந்து, குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்பாவது படிக்க வேண்டும் என்பது தான் இந்த நிகழ்வின் நோக்கமாகும்.


மேலும், 12 ஆம் வகுப்பு முடித்தவர்களை கல்லூரியில் சேர்க்கவும், 12 ஆம் வகுப்பில் குறிப்பிட்ட பாடங்களில் தேர்ச்சி அடையாதவர்களை, மீண்டும் தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி அடைய வைத்து கல்லூரியில் சேர்ப்பதுதான் இந்நிகழ்ச்சியின் நோக்கம். மாணாக்கர்கள் வாழ்க்கையில் குறைந்த பட்சம் இளநிலை பட்டப்படிப்பாவது படித்து இருக்க வேண்டும். குடும்பம் ஒன்று இருந்தால் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். அதையும் கடந்து, குழந்தைகளை தொடர்ந்து கல்வி கற்க வைப்பது பெற்றோருடைய கடமையாகும்.


 




 


 


"கல்வி ஒன்று தான் அழியாத செல்வம்". கல்விதான் நாம் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வழி வகை செய்யும். அதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, அரசின் திட்டங்களை அறிந்து, தொடர்ந்து கல்வி பயில முன் வரவேண்டும். மாவட்ட நிர்வாகமும், கல்வி துறையும் உங்களுக்கான தேவையான ஒத்துழைப்பு மற்றும் உதவியை வழங்க உள்ளோம். அதேபோல், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தங்களிடம் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைகிறார்களா? என்பதை கண்காணித்து அவர்களை ஊக்கப்படுத்தி, தேர்ச்சி அடையாத பாடங்களில் தேர்ச்சி அடைய வைத்து, ஆர்வமில்லாமல் இருந்தால் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி, தொடர்ந்து உயர்கல்வி படிக்க வைப்பது நமது சமுதாய கடமையாகும். அதேபோல், மாணவர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கு முன்னதாக அதற்கான அடிப்படை அறிவை உருவாக்க வேண்டும்.


பயிற்சியும் முயற்சியும் இருந்தால் எதையும் அடையலாம் என்பதை மாணவர்களுக்கு எண்ணங்களை உருவாக்க வேண்டும். அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு தமிழக அரசு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதை பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். இடத்தை நோக்கி, பல்வேறு வழிகளில் செல்லலாம், நடந்து செல்லலாம், மிதிவண்டியில் செல்லலாம், மோட்டார் சைக்கிளில் செல்லலாம், காரில் செல்லலாம் அதாவது ஏதாவது ஒரு வாகனத்தை பயன்படுத்தினால் செல்லும் இடத்திற்கு விரைவாக செல்லலாம், நான் சொல்வதெல்லாம் வாகனம் என்பது கல்வியாகும். அதை புரிந்து கொண்டு அனைவரும் உயர் கல்வி படிக்க முன் வரவேண்டும் என  தெரிவித்தார்.


 




 


 


முன்னதாக பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து உயர் கல்வி தொடராக மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து கருத்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி கீதா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் திரு.கன்னிசாமி, தாட்கோ மேலாளர் பாலமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்தகுமார், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி நாகலட்சுமி, மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.