செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கான அறிமுகப் பாடல் மற்றும் தொடக்க விழா கலை நிகழ்ச்சிகளை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதன்முறையாக இந்தியாவில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் தொடக்க விழா நேற்று (ஜூலை.28) நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து விழாவை தொடக்கி வைத்தார்.
ஆளுநர் ஆர்.என்ரவி, மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல்.முருகன், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் சௌந்தர்யா, நடிகர் கார்த்தி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஃபோனில் வாழ்த்திய சூப்பர்ஸ்டார்
இந்நிலையில் இந்தத் தொடக்கவிழா கலை நிகழ்ச்சிகளையும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ’வணக்கம் சென்னை செஸ்’ பாடலையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.
’வணக்கம் சென்னை செஸ்’ பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தொடக்க விழாவில் இடம்பெற்ற நிகழ்ச்சிகள், இயக்கம் ஆகியவையும் அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில், விழாவில் முன்னதாகப் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் விக்னேஷ் சிவனை நிகழ்ச்சி நடக்கும்போதும், விழா முடிந்து ஃபோனில் அழைத்தும் வாழ்த்தியுள்ளார்.
விக்னேஷ் சிவன் ட்வீட்
இதுகுறித்து முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், உங்கள் குரலைக் கேட்டது மிக்க மகிழ்ச்சி. என்னைப் பாராட்டியதற்கு நன்றி. நீங்கள் விழாவில் பங்குபெற்றது எனது நாளை மேலும் அழகாக்கியுள்ளது” என ட்வீட் செய்துள்ளார்.
விக்னேஷ் சிவனை திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.