தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். ஏராளமான திரைப்படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானவர். வில்லத்தனமான கதாபாத்திரங்கில் தான் பெரும்பாலும் நடித்தாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் மட்டுமின்றி தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார். சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த பாடகராகவும் திகழ்ந்து வந்த கோட்டா ஸ்ரீனிவாச ராவ் வயது 81. 1978ம் ஆண்டு வெளியான 'பிராணம் கீரகிடு' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
தமிழில் அறிமுகம் :
நடிகர் விக்ரம் நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'சாமி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கோட்டா ஸ்ரீனிவாச ராவ் அதை தொடர்ந்து திருப்பாச்சி, குத்து, ஏய், கோ, சகுனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது தன்னுடைய வாக்குகளை பதிவு செய்ய வந்த கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு காணப்பட்டார். மிகவும் கம்பீரமான ஒரு வில்லனாக அவரை பார்த்து ரசித்த மக்களுக்கு அவர் மற்றோருவரை தாங்கி பிடித்தவாறு தள்ளாடி நடந்து வந்து வாக்களித்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
டெரரான வில்லன் :
நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் பேசிய நடிகர் ராஜேந்திரன் இதுதொடர்பாக பேசி இருந்தார். அவருக்கு நான் பின்னணி குரல் கொடுத்த நாட்களை நினைவு கூர்கிறேன். முதலில் அவருக்காக நான் டப்பிங் பேசியது சாமி படத்திற்காக தான். அவருக்கு என்னுடைய குரல் அத்தனை பொருத்தமாக இருக்கும். அவர் மிகவும் மிரட்டலாக டெரராக தெரிந்தாலும் நிஜத்தில் மிகவும் அன்பானவர் நல்லவர். அரசியலில் இறங்கிய பிறகு எம்.எல்.ஏவாக இருந்த போது கூட மிகவும் எளிமையானவராக தான் வாழ்ந்து வந்தார்.
மகனின் அகால மரணம் :
அவரின் மகன் மரணம் அவரின் கண்முன்னே நடந்ததில் இருந்தே அவர் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டுவிட்டார். மகனுக்காக வெளிநாட்டில் இருந்து ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றை வாங்கி கொடுத்தார். அந்த சந்தோஷத்தை கொண்டாடும் வகையில் குடும்பத்துடன் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு திரும்புகையில் அனைவரும் காரில் வர மகன் பைக்கில் வந்து கொண்டு இருக்கும் போது எதிரில் வேகமாக வந்த வேன் ஒன்று அவன் மீது மோதி ஸ்பாட்டிலேயே குடும்பத்தின் கண்முன்னாடியே மகன் இறந்து போனான். இத்தனை பேரும், புகழும், பணமும் இருந்தும் மகனை இழந்த துக்கம் அவரை வாட்டி வதைத்தது. இன்றும் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் வயது மூப்பு காரணமாக அவர் ஓய்வில் இருந்து வருகிறார் என தெரிவித்து இருந்தார்.