ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் ருத்ரன், சந்திரமுகி 2 மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. இதில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. இந்த ஆண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் இரண்டுக்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன. விஷாலின் அயோக்கியா படத்தின் இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் ஹண்டர் படத்தில் நடித்து வருகிறார். அடுத்தபடியாக பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் எழுதி படத்தையும் அவரே தயாரித்தும் வருகிறார். இவை தவிர்த்து லாரன்ஸின் ஹிட் சீரிஸான காஞ்சனா 4 ஆம் பாகம் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
காஞ்சனா 4
சென்னை விமான நிலையத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "தற்போது பென்ஸ் என ஒரு படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்தது காஞ்சனா பார்ட் 4 படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதி முடித்துள்ளேன்.” என தெரிவித்துள்ளார். மேலும் சென்னை பெரம்பூரில் கூலிப்படையால் கொலை செய்யப் பட்ட பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குறித்தும் ராகவா லாரன்ஸ் பேசியுள்ளார். “ ஆம்ஸ்ட்ராங்குக்கு நடந்தது மிகவும் வருத்தமாக இருக்கின்றது,இனி யாருக்கும் இது போன்று நடக்கக்கூடாது என கடவுளை வேண்டிக் கொள்கின்றேன்’ என கூறினார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை
பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் அவரது வீட்டின் அருகிலேயே வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு இரு சக்கரங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், இந்த கோர சம்பவத்தை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக, கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு என்பவர் உட்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன்பு போலீசில் சரணடைந்துள்ளனர். சரணடைந்த நபர்கள் தான் உண்மையான குற்றவாளிகளா என்கிற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
ஆம்ஸ்ட்ராங்கின் உடம் பெரம்பூரில் உள்ள பந்தர் கார்டன் பள்ளியில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள். திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பல்வேறு தரப்பினர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற இருக்கின்றன. இன்று பிற்பகல் நேரத்தில் ஊர்வலம் தொடங்கி அவரது உடல் அடக்கம் செய்யப் படவுள்ளது.