இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், வடிவேலு உட்பட பல்வேறு பிரபலங்கள் நடிப்பில் உருவான சந்திரமுகி இரண்டாம் பாகம் வருகின்ற 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பல்வேறு மொழிகளில் திரைக்கு வரவுள்ள இப்படத்திற்கான பிரமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷன் பணிகளின் ஒரு நிகழ்வு கோவையில் உள்ள லூலூ மாலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகை மகிமா நம்பியார் பொது மக்களிடையே இப்படம் குறித்து உரையாடினர்.


மேலும் அந்த மாலில் பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு நடத்தப்பட்ட ஒரு மாத கால போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு கார் இரண்டு இருசக்கர வாகனங்கள், செல்போன் மற்றும் சமையல் உபகரணங்களை நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடமும் குழந்தைகளுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டு நடனமாடி மகிழ்ந்தார்.


இதையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் மதிமா நம்பியார் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகை மகிமா நம்பியார், ”இப்படம் திரையரங்குகளுக்கு வரவுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் திரையரங்குகளில் சென்று பாருங்கள்” எனத் தெரிவித்தார். பின்னர் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், ”கோவைக்கு வருவது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். அடிக்கடி ஈஷா யோகாவிற்கு வருவேன். கோவை மக்கள் எப்பொழுது பேசினாலும் மிகவும் மரியாதையாக அண்ணா என்ற வார்த்தையை குறிப்பிட்டு பேசும் அன்பு எனக்கு மிகவும் பிடிக்கும். திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். சந்திரமுகி முதல் பாகத்தை எப்படி கொண்டாடினீர்களோ, அதில் உள்ள அனைத்து விஷயங்களும் இதில் இருக்கும்.


நடிகர் ரஜினி நடித்த இந்த படத்தை நான் திரையரங்கில் பார்த்துள்ளேன். தற்பொழுது அதில் நடித்திருப்பது கடவுள் எனக்கு அளித்த ஆசீர்வாதம். சந்திரமுகி முதல் பாகம் இரண்டாம் பாக கதைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. முதல் பாகத்தில் நடிகை ஜோதிகா சந்திரமுகி போல் நினைத்துக்கொண்டார். இதில் ஒரிஜினல் சந்திரமுகி வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கதை. ஒரு வசனத்தை "ஒரிஜினல் சந்திரமுகி பீசே வருது" என நடிகர் வடிவேல் கூறி இருப்பார். அது இந்த படத்திலும் வருகிறது. இந்த படத்தில் வேட்டையன் கதாபாத்திரத்தில் ஒரு சஸ்பென்சும் உள்ளது. அது படத்தை பார்க்கும் பொழுது அது வேட்டையனா? அல்லது வேட்டையன்போல் வேறு ஒருவரா என தெரியவரும். இந்த படத்தை இயக்குனர் வாசு மிகச் சீரியசாக எடுத்துள்ளார்.


ரஜினியை விட சூப்பராக பண்ண வேண்டும் என என்றைக்கும் நினைக்கக் கூடாது.நினைத்தாலும் வராது. ரஜினி ரஜினி தான். எனவே எனக்கு அளித்த கதாபாத்திரத்தை பயந்து செய்துள்ளேன். நான் மாற்றி மாற்றிதான் படங்களை செய்கிறேன். ஆனால் உங்கள் கண்களுக்கு பேய் படங்கள் மட்டும்தான் தெரிகிறது” எனத் தெரிவித்தார்.


பேயை பார்த்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, ”என்னை தினமும் கண்ணாடியில் பார்க்கிறேன்” என நகைச்சுவையாக பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “மாமன்னன், தேவர் மகன் ஆகிய படங்கள் இரண்டிலுமே நடிகர் வடிவேலு மிகச் சீரியசான கதாபாத்திரங்களை எடுத்து நடித்துள்ளார். நடிகர் வடிவேலுவை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்தாலும் நகைச்சுவை நடிகராக பார்க்க வேண்டும் என நினைப்போம். மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலு அழுதால் நமக்கும் அழுகை வரும். ஆனால் இந்த படத்தில் ஐந்தாவது நிமிடத்திலேயே வடிவேலு அழுவார் ஆனால் நமக்கு சிரிப்பு வரும். இந்த படத்தில் நாங்கள் பயந்து பயந்து நடித்துள்ளோம். அதற்கான கூலியை கடவுள் தந்து விடுவார் என எதிர்பார்க்கிறோம்.


தமிழ் சினிமா கொரோனா காலத்துக்கு முன்பு ஒரு மாதிரி இருந்தது. ஆனால் தற்போது விக்ரம் படம் மூலம் லோகேஷ் கனகராஜ் மாற்றி உள்ளார். இதுபோன்று பல்வேறு இயக்குனர்கள் வந்துள்ளனர். நெல்சன் போன்றவர்கள்  புதிதாக பல விஷயங்களை செய்கிறார்கள். கதைக்கு முக்கியத்துவம் குறைத்து ஸ்கிரீன் ப்ளே, ஆக்சன் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். எனவே நாமும் அதற்கு தகுந்தாற்போல் மாறிக்கொள்ள வேண்டும். மார்க் ஆண்டனி படம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது. இப்படியான நிலை விஷாலுக்கும் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடந்துள்ளது” என்றார்.


சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்தான கேள்விக்கு, ”அதைப்பற்றி நான் ஒரு கதையையே கூறியுள்ளேன். அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் "மாங்காய் மரம் தேங்காய் மரம்" என்று நான் ஒரு கதையை சொல்லி இருப்பேன். அதை பாருங்கள்” எனப் பதிலளித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், “வட மாநிலங்களில் உள்ள நடிகர்கள் நம் இயக்குனர்களை தேர்ந்தெடுத்து படங்கள் செய்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று. அட்லி செய்த படம் அங்கு மிகப் பெரிய ஹிட் ஆகியுள்ளது. நம்ம ஆளு இங்க இருந்து அங்க போய் ஜெயிக்கும்பொழுது மிகப்பெரிய சந்தோஷம் அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.