எனக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம். படங்களில் நடிப்பதால் நல்ல வருமானம் வருகிறது. எனக்கு செய்யும் உதவியை ஆதரவற்ற மற்றவர்களுக்கு செய்யுங்கள் என நடிகை ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர், நடிகர் என பன்முக திறமை கொண்ட ராகவா லாரன்ஸ் 1993ம் ஆண்டு அர்ஜூன் நடித்த ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து அமர்க்களம், டான்சர், வருஷமெல்லாம் வசந்தம், பாபா, அற்புதம், தென்றல், பாண்டி என பல படங்களில் நடித்த ராகவா லாரன்ஸ், காஞ்சனா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது ரஜினி நடிப்பில் வெளிவந்து பிரமாண்ட வெற்றிப்பெற்ற சந்திரமுகி படத்தின் அடுத்த பாகத்தில் வேட்டையன் ராஜாவாக நடித்துள்ளார்.
பி. வாசு இயக்கியுள்ள இந்த படத்தில் வடிவேலு, கங்கனா ரனாவத் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். பிரமாண்டமாக உருவாகியுள்ள சந்திரமுகி 2 வரும் செப்டம்பர் 15ம் தேதி படம் ரிலீசாவதையொட்டி, புரோமோஷன் வேலையாக படத்தின் பாடல்களை படக்குழு வெளியிட்டது. அண்மையில் படத்தின் இசை வெளியிட்டு விழா கோலாலகமாக சென்னையில் நடைபெற்றது.
நடனம், நடிப்பு, இயக்குநர் என திரையுலகை கலக்கி வரும் ராகவா லாரன்ஸ், தனிப்பட்ட முறையில் ஆதரவற்றோருக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் தனியாக அறக்கட்டளை வைத்து உதவி வருகிறார். லாரன்ஸ் நடத்தும் அறக்கட்டளைக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில் தனக்கு யாரும் பண உதவி செய்ய வேண்டாம் என அன்பு வேண்டுகோளாக ராகவா லாரன்ஸ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், ”என்னுடைய டிரஸ்டிற்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம். நான் டான்ஸ் மாஸ்டராக இருக்கும் போதே டிரஸ்ட் ஆரம்பித்தேன். 60 குழந்தைகளை என் பொறுப்பில் பார்த்து கொண்டேன். மாற்றுத்திறனாளிகளுக்கு டான்ஸ் சொல்லி தருவது, ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கு உதவுவது என செய்து வந்தேன். அப்பொழுது எனக்கு வசதி இல்லாததால் மற்றவர்களின் உதவியை கேட்டிருந்தேன். இப்பொழுது நான் ஹீரோவாக நடித்து வருகிறேன். முன்பு எல்லாம் 2 ஆண்டுகளுக்கு ஒரு படத்தில் நடிப்பேன். தற்போது ஒரு வருடத்திற்கு 3 படங்களில் நடித்து வருகிறேன். நல்ல சம்பளம் வருகிறது.
இதனால் எனக்குள் ஒரு கேள்வி ஏற்படுகிறது. உனக்கு நல்லா தானே பணம் வருகிறது. ஏன் மற்றவர்களிடம் பணம் கேட்கிறாய் என தோன்றுகிறது. பணத்தை வேண்டாம் என ஆணவமாக நான் கூறவில்லை. எனக்கு கொடுக்கும் பணத்தை உங்கள் வீட்டு அருகில் இருப்போருக்கு உதவி செய்யுங்கள். என்னுடன் சேர்ந்து உதவி செய்ய விரும்புவதாக பலர் கூறுகின்றனர். அதனால் மகிழ்ச்சி தான். ஆனால், யார் கஷ்டப்படுகிறார்கள் என நான் கூறுகிறேன். நீங்களே உங்கள் கையால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அதில் மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும்” என பேசியுள்ளார்.