தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களுக்கும் சென்று ஆதரவற்றோர்கள் உடல்களை பெற்று நல்லடக்கம் செய்யும் ணியில் சமூக சேவகர் மணிமாறன் ஈடுபட்டு வருகிறார். இதுவரை 2955 ஆதரவற்ற உடல்களை பெற்று அவர்களின் ஆன்மா சாந்தி அடையும் வகையில் நல்லடக்கம் செய்து வருகிறார். இவரது தந்தை பாண்டுரங்கன் கடந்த ஜூலை மாதம் எட்டாம் தேதி மரணம் அடைந்தார். அவரது நினைவாக திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தில் உள்ள சமூக சேவகர் மணிமாறனுடைய விவசாய நிலத்தில் அவருடைய தந்தை அடக்கம் செய்து அங்கு சிவாலயம் ஒன்றை மணிமாறன் கட்டி முடித்துள்ளார். சிவாலயத்திற்கு இன்று தனது தந்தையின் 48-வது நினைவு நாளையொட்டி வழிபாடு செய்யும் விதமாக சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் தாயார் கண்மணி அவர்கள் பங்கேற்று சிவன் அடியார்களுடன் மெய்மறந்து சிவன் பாடல்களை மனம் உருகி பாடினார். மேலும் சிவனடியார்களுக்கு அன்னமிட்டு அவர்களது பாதத்தை தொட்டு வணங்கி ஆசி பெற்றார். இதையடுத்து நரியா பட்டு, பழையனூர், தச்சம்பட்டு, காட்டாம் பூண்டி ஆகிய  கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களுக்கு வஸ்ரதானம் வழங்கினார். 


 





பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகவா லாரன்ஸ் தாயார் கண்மணி கூறுகையில்,


ஆதரவற்றோர் உடல்களை பெற்று அடக்கம் செய்யும் தன்னலமற்ற பணியை செய்து வரும் மணிமாறனின் தந்தை இறந்ததைக் கண்டு வேதனை அடைந்தேன். இன்று அவருடைய நினைவு நாளில் கலந்து கொள்ள வேண்டும் என கூறியதை அடுத்து தான் பங்கேற்றதாகவும் மணிமாறனும் எனக்கு ஒரு மகன்தான், திரைத் துறையில் உள்ளவர்கள் தவறு செய்யக் கூடாது, செய்த தவறை மறந்து ஆன்மீகத்தில் நாட்டம் செலுத்துங்கள். இறைவனை வேண்டினால் நல்ல புத்தி கிடைக்கும்.




தாய், தந்தை என்பவர் கடவுளுக்கும் மேலானவர்கள் 


திரைத்துறை மட்டுமல்லாது எந்த துறையில் இருந்தாலும் தவறான பாதைக்கு யாரும் செல்ல வேண்டாம். கைபேசி தான் தற்போது அனைவரையும் தவறான பாதைக்கு அழைத்து செல்வதாகிறது. தாய், தந்தையரை கஷ்டப்பட்டாலும் காப்பாற்றுங்கள், அவர்களை முதியோர் இல்லத்தில் விட்டு விடாதீர்கள் தாய் தந்தையர் என்பவர் கடவுளுக்கும் மேலானவர் அவர்களுக்கு பின்பு தான் கடவுள். இன்று நீங்கள் செய்த செயலை நாளை உங்கள் மகன் உங்களுக்கு செய்ய மாட்டான் என்பது என்ன நிச்சயம்.  எனவே அனைவரும் தங்களுடைய தாய், தந்தையரை கைவிட்டு விடாதீர்கள் எனவும் பேட்டி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட சிவனடியார் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.