வால்பாறை அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தற்காலிக உதவி பேராசிரியர்கள் நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


கோவை மாவட்டம் வால்பாறை பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை ஏழில் கொஞ்சும் மலைப்பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களையும், வனப்பகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தேயிலை தொழில் இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள மாணவர்கள் கல்வி பயிலும் வகையில் வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்தக் கல்லூரியில் கடந்த மாதம் 30 ஆம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையைச் சேர்ந்த சமூக நல அதிகாரி கிருஷ்ணவேணி பாலியல் தொல்லை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.


4 பேர் பணியிடை நீக்கம்


அப்போது கல்லூரி மாணவிகளில் சிலர் கல்லூரியில் தற்காலிக உதவி பேராசிரியர்களாக பணி புரிபவர்களில் நான்கு பேர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சமூக நல அதிகாரி கிருஷ்ணவேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் வால்பாறை அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தற்காலிக உதவி பேராசிரியர்கள் சதீஷ் குமார் (24), முரளி ராஜ் (33), ராஜபாண்டி (35), அன்பரசன் (30) ஆகிய நான்கு பேர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து  நான்கு பேர் மீதும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். 


இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்து இருந்தார். இதனைத்தொடர்ந்து சதீஷ் குமார், முரளி ராஜ், ராஜபாண்டி, அன்பரசன் ஆகிய 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கல்லூரிக் கல்வி துறை மண்டல இணை இயக்குநர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.