நடிகர் ராதாரவி தனது சராமரியான சர்ச்சை பேச்சுகளுக்குப் பெயர் போனவர். அண்மையில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினியின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்துப் பேசியிருந்தார். அதில், ”கமல் எனது பால்யகால சிநேகிதர்.அதனால் நான் அவருக்கென நிலைப்பாடு எடுத்துச் சொல்கிறேன் என யாரும் நினைக்க வேண்டாம். உண்மையில் அவரை மாதிரி யாரையுமே பார்க்க முடியாது.இரண்டு கால்கள் இல்லையென்றாலும் கால் இருப்பவன் போல நடிப்பார். கால் இல்லை என்பது போல நடி என்றாலும் நடிப்பார். அப்படியொரு ஜீனியஸ். விக்ரம் படம் பார்த்தேன். சுனாமி வந்தபோது நிலத்தை புரட்டிப்போட்டது.அதுபோல இருந்தது அவர் நடிப்பு. இந்தக்கால இளைஞர்களை அப்படியே ஒரு படத்தில் புரட்டிப்போட்டுவிட்டார்.
ஆனால் நடிகர்கள் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளலாம். அரசியல் என்பது முற்றிலும் வேறு களம். கமல் அரசியலுக்கு வந்திருப்பது சரி அவர் முதல்வர் ஆனாலும் ஒன்றும் பெரிசாகப் பிரச்னை இருக்காது.அவர் சொல்வதை ஒரு மணி நேரம் கேட்டாலே யாருக்கும் புரியாது. இதில் எப்படி ஐந்து வருடங்கள் கேட்டுக்கொண்டிருப்பார்கள். நல்லவேளை ரஜினி அரசியலுக்கு வரவில்லை.
அவர் மிகவும் நல்ல மனிதர். அவருடன் நடிக்கும்போது அடிக்கடி அரசியல் குறித்து விவாதிப்பார். தான் அரசியலுக்கு வந்தால் நான் அவரது கட்சியில் இருந்தால் என்ன பேசுவேன் எனக் கேட்பார்,”மராத்தியத்தில் பிறந்து கன்னடத்தில் விதைக்கப்பட்டு தற்போது தமிழில் வளர்ந்துகொண்டிருக்கிறார்” எனப் பேசுவேன் என்றேன். அதுவே வேறு ஒரு கட்சியில் இருந்தால் என்னைப் பற்றி என்ன பேசுவீர்கள் எனக் கேட்டார்,”செக்போஸ்ட் தாண்டி வந்தவருக்கு என்ன தெரியும் எனப் பேசுவேன்”என்றேன்.அவர் மிகவும் நல்ல மனிதர்.அப்பழுக்கற்றவர். அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது” என்றார்.