Vendhu Thandhadhu Kaadu Audio Release: "வெந்து தணிந்தது காடு" படத்திற்கும் சூப்பர் ஸ்டாருக்கும் ஒரு தொர்பு உள்ளதாம்.. என்னவாக இருக்கும்... 
 
வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "வெந்து தணிந்தது காடு" திரைப்படம். கௌதம் வாசுதேவ்  மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் செப்டம்பர் 15ம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. 


மூன்றாவது முறை :


இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - நடிகர் சிம்பு கூட்டணியில் இது மூன்றாவது படம். "விண்ணைத்தாண்டி வருவாயா", "அச்சம் என்பது மடமையடா" படங்களின் பட்டியலில் அடுத்து இணைந்துள்ளது "வெந்து தணிந்தது காடு" திரைப்படம். 


ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்கள் அருமை:


"வெந்து தணிந்தது காடு" படத்திற்கு இசை அமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இப்படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ பாடலான 'காலத்துக்கும் நீ வேணும்' பாடலை தொடந்து இப்படத்தின் இரண்டாவது பாடல் "மறக்குமா நெஞ்சம்..." என்ற பாடல் சமீபத்தில் தான் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வெளியீட்டு நாள் நெருங்கி வருவதால் படக்குழுவினர் படத்தின் விளம்பர பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதன் முதல் படியாக இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலரை வரும் செப்டம்பர் 2ம் தேதி வெளியிடலாம் என முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. 


 






சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு:


வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரம்மாண்டமான அரங்கில் இந்த இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சிறு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அழைக்க திட்டமிட்டுள்ளனர் என தெரிகிறது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் உரிமையாளரான ஐசரி கணேஷ்  மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவருக்கும் இடையில் நீண்ட நாள் நட்பு இருப்பதால் அவர் இந்த விழாவில் சிறு விருந்தினராக கலந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. 


 






படத்தின் முக்கிய புள்ளிகள்:


நடிகர் சிம்பு, சித்தி இதானி, சித்திக், ராதிகா, நீரஜ் மஹாதேவன், ஏஞ்செலினா ஆப்ரகாம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியிடப்படுகிறது. இப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். பாடல்களுக்கு வரிகளை எழுதியுள்ளார் தாமரை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இப்படத்தின் டீஸர் வெளியாகி திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.