நடிகர் ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் படத்தின் தான் நடிக்காமல் போனது குறித்து நடிகர் ராதாரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது. 


கடந்த 1997 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம் ‘அருணாச்சலம்’. இந்த படத்தில் சௌந்தர்யா, ரம்பா, அம்பிகா, மனோரமா, ரகுவரன், விசு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ப்ரூஸ்டர்ஸ் மில்லியன்ஸ் என்ற ஆங்கில நாவல் ஏற்படுத்திய தாக்கத்தில், ரஜினி இப்படத்தை விரும்பியதாக கூறப்படும் நிலையில், சினிமா துறையில் பல்வேறு காலகட்டத்தில் தனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு உதவி செய்ய ரஜினி தயாரித்து நடித்திருந்தார். 






ரஜினி தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மிகப்பெரிய கோடீஸ்வரரான வேதாச்சலம் தன் மகனுக்கு பணத்தின் மீது ஆசை இருக்கக்கூடாது என்ற காரணத்துக்காக 30 நாட்களில் ரூ.30 கோடி செலவு செய்ய வேண்டும் என தெரிவித்து, வித்தியாசமான நிபந்தனைகளை விதிக்கிறார். இந்த சவாலில் ரஜினி வென்றாரா என்பதே இப்படத்தின் கதை. கிரேஸி மோகன் அருணாச்சலம் படத்திற்கு வசனம் எழுத, ரஜினி படத்தை இயக்க வேண்டும் என்ற ஆவலுக்காகவே சுந்தர்.சி இயக்குநரானார்.




இதனிடையே ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி இப்படம் பற்றி பேசியுள்ளார். அதாவது அருணாச்சலம் படத்தை முதலில் பி.வாசு இயக்குவதாக இருந்தது. அவர் என்னிடம் ரவி நீதான் என் படத்துல வில்லன் என சொல்லியிருந்தார். அப்போது நான் 4வதாக ஒரு கன்னட படம் நடிக்க கமிட் ஆகியிருந்தேன். அந்நேரம் திடீர்ன்னு ரஜினி போன் பண்ணாரு. கொஞ்சம் வீட்டுல வந்துட்டு போக முடியுமான்னு கேட்டாரு.


வர்றேன்னு சொல்லிட்டு மைசூரு கார்ல போறதுக்கு முன்னாடி வீட்டுக்கு போறேன். காலையில 8 மணிக்கு நாங்க குடிக்க ஆரம்பிச்சோம். என்கிட்ட ரஜினி நீங்க எந்த டைம்ல குடிப்பீங்க என கேட்டாரு. நான் உடனே எனக்கு நேரம் காலமெல்லாம் இல்லை. வேலை இல்லை என்றால் குடிப்பேன் என சொன்னவுடன் சரி குடிக்கலாம் என கேட்டார்.


அருணாச்சலம் படத்துல நீங்க தான் வில்லன் என சொல்லி படம் சம்பந்தப்பட்ட ஃபைலை என்னிடம் காட்டினார். ஆனால் இப்ப பி.வாசுவை மாத்திட்டு சுந்தர் சி இயக்கவுள்ளார். மேலும் 3 வில்லன் ஆகிடுச்சு. அதனால நீங்க பண்ணா நல்லா இருக்குமான்னு எனக்கு தெரியல. வேற வில்லனை போட்டுருக்கோம் என சொன்னார். 


ஒரு நடிகர் கிட்ட கூப்பிட்டு சொல்றாருன்னு யோசிச்சேன். நடிகராக இருக்கும்போது அந்த கஷ்டம் தெரியும். சினிமாவின் தலையெழுத்து என்ன தெரியுமா சார் என கேட்டேன். என்ன என அவர் கேட்க, ரஜினியை சுட்டிக்காட்டி இந்த திறமை (ராதாரவி) இந்த அதிர்ஷ்டத்தை (ரஜினி) தேடி வரவேண்டியிருக்கிறது.


முதலில் புரியாமல் முழித்த ரஜினி என்ன சொன்னீங்க என திரும்ப கேட்டார். நான் சொன்னதும் அடேங்கப்பா... என அவர் சொல்ல, அப்பவே தெரியும் முடிச்சிட்டாரு நம்ம கதையை என ராதாரவி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.