லூசிஃபர் 2

இந்திய சினிமாவில் மிகவும் தனித்துவமான நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். தமிழில் மொழி , சத்தம் போடாதே,  காவியத்தலைவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளம் , இந்தி , தமிழ் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவை தவிர்த்து மோகன்லாலை வைத்து இவர் இயக்கிய லூசிஃபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. தற்போது இதன் இரண்டாவது பாகம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தொடர்ச்சியாக தன் மீது வெறுப்பு இருந்து வருவது குறித்து பிருத்விராஜ் மனம் திறந்து பேசியுள்ளார்

Continues below advertisement

காரணமில்லாமல் என்னை வெறுக்கிறார்கள் - பிருத்விராஜ்

பிருத்விராஜை விமர்சிப்பவர்கள் அவர்மீது வைக்கும் பொதுவான குற்றச்சாட்டுகளில் ஒன்று அவர் ஆங்கிலத்தில் பேசுவது. இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பிருத்விராஜ் இப்படி கூறியுள்ளார் " என்னை இன்னும் சிலர் வெறுக்கவே செய்கிறார்கள். நான் ஆங்கிலத்தில் பேசுவதை அவர்கள் காரணமாக சொன்னால் நான் ஒன்றை கேட்கிறேன். கேரளாவில் இருக்கும் என் தலைமுறையைச் சேர்ந்த எத்தனை பேருக்கு என் அளவு மலையாளத்தில் எழுத படிக்க தெரியும்? நான் சினிமாவுக்கு வந்த புதிதில் என்னை நிறைய விமர்சித்தார்கள். அப்போதெல்லாம் நான் எந்த வகையில்  அவர்கள் மனதை புன்படுத்திவிட்டேனா என்று நிறைய யோசித்திருக்கிறேன். என்னுடைய தனிப்பட்ட செயல் ஏதாவது அவர்களை பாதித்திருக்கிறதா என்று யோசித்திருக்கிறேன்.

ஆனால் நான் தெரிந்துகொண்டது இதுதான். உங்களை ஏன் வெறுக்கிறார்கள் என்கிற எந்த காரணமும் இல்லாவிட்டால் அது உங்கள் கையில் இருக்கும் பிரச்சனை இல்லை. அந்த வெறுப்பு ஏதோ ஒரு காரணத்தில் இருந்து பிறந்தது இல்லை. நான் ஏதாவது தவறு செய்திருந்தாலோ படப்பிடிப்பின் போது யாரையாவது திட்டி இருந்தாலோ அந்த நாள் படப்பிடிப்பு முடியும்போது நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுவிடுவேன். அப்படி இருக்கையில் எந்த வித காரணமும் இல்லாமல் என்னை வெறுத்தால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டே" என அவர் கூறியுள்ளார்.