திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த பிரதாப் போத்தன் 1978 ஆம் ஆண்டு இயக்குனர் பரதனின் ஆரவம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் 1979 ஆம் ஆண்டு அழியாத கோலங்கள் படத்தில் அறிமுகமான அவர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும் உள்ளார். 






தமிழில் நடிகராக அழியாத கோலங்கள், மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், குடும்பம் ஒரு கதம்பம், கரையெல்லாம் செண்பகப்பூ, வாழ்வே மாயம், மீண்டும் ஒரு காதல் கதை, பிரியசகி, ஆயிரத்தில் ஒருவன், படிக்காதவன் ஆகிய படங்களில் பிரதாப் போத்தனின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. இதில் மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் இயக்குநராகவும் அறிமுகமான அவர் அப்படத்திற்காக அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றார். 


தொடர்ந்து கமலை வைத்து வெற்றி விழா, பிரபுவை வைத்து மைடியர் மார்த்தாண்டன், தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சீவலப்பேரி பாண்டி, கார்த்திக்கின் லக்கிமேன் ஆகிய படங்களையும் பிராதாப் போத்தன் இயக்கியுள்ளார். மேலும் 2 முறை சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்.  தமிழில் கடைசியாக கமலி ஃப்ரம் நடுக்காவேரி ஆகிய படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து மலையாளத்தில் மோகன்லால் படமான 'பரோஸ்: கார்டியன் ஆஃப் டி'காமா'ஸ் ட்ரெஷரிலும் பிரதாப் போத்தன் நடித்திருந்தார். இந்த படம் இன்னும் ரிலீசாகவில்லை. 


69 வயதான பிரதாப் போத்தன் 1985-ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த திருமணம் ஒரே ஆண்டில் முறிந்து போனது. தொடர்ந்து 1990-ஆம் ஆண்டு அமலா சத்யநாத் என்பவரை 2-வதாக அவர் திருமணம் செய்துகொண்ட நிலையில் 2012-ஆம் ஆண்டு அந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. இந்நிலையில்  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் பிரதாப் போத்தன்  உடல் நலக்குறைவால் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண