நடிகர் பிரஷாந்த் நடிப்பில் வெளியான திகில் திரைப்படமான ‘ஷாக்’ வெளியாகி இன்றோடு 19 ஆண்டுகள் நிறைவடைகிறது. 


தமிழ் சினிமாவின் திகில் திரைப்படம் 


பொதுவாக தமிழ் சினிமாவில் எடுக்கப்படும் ஹாரர் படங்கள் பெரும்பாலும் காமெடி களத்தை மையமாக வைத்தே எடுக்கப்படும். அதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள். டிவியில் போட்டால் கூட பயந்து போய் பார்க்காமல் இருப்பார்கள். இப்படிப்பட்ட நிலையில் முழுக்க முழுக்க ஹாரர் காட்சிகளுடன் படமாக்கப்பட்டது தான் ‘ஷாக்’. 


இந்த படம் 2003 ஆம் ஆண்டு இந்தியில் ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் வெளியான பூட் படத்தின் ரீமேக் ஆகும். தமிழில் உருவான ஷாக் படத்தில், பிரஷாந்த், மீனா, அப்பாஸ், தியாகராஜன், சரத்பாபு, சுஹாசினி, தேவன், கே.ஆர்.விஜயா, கலைராணி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சலீம்–சுலைமான் இசையமைத்த இந்த படத்தை தியாகராஜன் இயக்கி தயாரித்தார். விமர்சன ரீதியாக இந்த படம் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. 


படத்தின் கதை 


இந்த படத்தின் கதை பிரஷாந்த் மற்றும் மீனாவை சுற்றியே நகரும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. ஒரு உயரமான அபார்ட்மெண்ட்  வீடு ஒன்றில் இருவரும் குடியேறுகின்றனர். அந்த வீட்டில் அதற்கு முன்னால் ஒரு பயங்கரமான சம்பவம் நடைபெறுகிறது. ஒரு பெண் தனது குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவிக்கப்பட்ட, மீனா விநோதமாக நடந்துக் கொள்ள ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் பெண்ணின் ஆவி அவரை பிடித்துள்ளது கண்டுபிடிக்கப்படுகிறது. மீனாவை குணப்படுத்த பிரஷாந்த் நடவடிக்கைகள் எல்லாம் மேற்கொள்கிறார். இறுதியில் மீனாவை விட்டு அந்த பேய் சென்றதா? அப்பெண்ணின் பின்னணி என்ன? என்பது கதையாக அமைக்கப்பட்டிருந்தது. 


சொல்லப்பட்ட கற்பனை கதை


ஷாக் படத்தை தியேட்டரில் பார்த்த ஒருவர் இறந்து விட்டார். இந்த படத்தை தனியாக தியேட்டரில் பார்க்க தைரியம் வேண்டும் என்றெல்லாம் 90ஸ் கிட்ஸ் மத்தியில் கதை கட்டி விட்டார்கள். முழுக்க முழுக்க ரசிகர்களுக்கு த்ரில்லர் அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கதையானது பரவியது. 


அறியப்பட்டாத தகவல் 


ஷாக் படத்தில் முதலில் சிம்ரன், தொடர்ந்து ரீமாசென் ஆகியோர் ஹீரோயினாக நடிக்க இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் இறுதியாக மீனா வந்தார். அப்பாஸ் இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார்.  படத்தின் படப்பிடிப்பு 26 நாட்களுக்குள் நிறைவடைந்தது. தமிழ் பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு ரீமேக்கில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.