பெரும் பொருட்செலவில் உருவாக உள்ள வார்-2 திரைப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைந்து நடிக்க, தெலுங்கு நடிகர் ஜுனியர் என்.டி.ஆர் ஒப்பந்தமாகியுள்ளார். பன்மடங்கு எதிர்பார்ப்புகளை கொண்டுள்ள இந்த படம், 1000 கோடி ரூபாய் வரையில் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


வார் திரைப்படம்:


ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், கடந்த 2019ம் ஆண்டு வெளியானது வார் திரைப்படம். ஆக்‌ஷன் கதைக்களைத்தை மையமாக கொண்டு வெளியான இந்த ஸ்பை த்ரில்லர் திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 170 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 475 கோடி ரூபாயை வசூலாக அள்ளியது. இதனால், இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் வெளியாகும் என ஏற்கனவே பேசப்பட்டது.


ஆர்ஆர்ஆர் திரைப்படம்:


இதனிடையே, தென்னிந்தியாவில் பிரபலமான தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர், ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தற்போது இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமாவிலும் பிரபலமாகியுள்ளார். கொமரம் பீம் கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்நதது. இதையடுத்து, கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் ஜுனிய்ர் என்.டி.ஆர். நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் ஒப்ப்ந்தமாகியுள்ளார்.


வார்-2வில் ஹ்ரித்திக் ரோஷனுடன் இணையும் ஜுனியர் என்.டி.ஆர்:


இந்நிலையில்,அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாக உள்ள வார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில், ஹ்ருத்திக் ரோஷனுடன் இணைந்து நடிக்க ஜுனியர் என்.டி.ஆர் ஒப்பந்தமாகியுள்ளார். இரண்டு மாஸ் ஹீரோக்கள் இணைந்து இருப்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதோடு, ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கும் முதல் இந்தி திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. முந்தைய படத்தை காட்டிலும் பெரும் பொருட்செலவில் உருவாக உள்ள இந்த படம், ஜுனியர் என்.டி.ஆரின் புகழால் உலகளவில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வார் திரைப்படம் வட இந்தியாவில்; பெரும் வரவேற்பை பெற்றாலும், தென்னிந்தியாவில் போதிய வரவேற்பை பெறவில்லை. தற்போது ஜுனியர் என்.டி.ஆர் இணைந்து இருப்பதால், வார்-2 திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக பிரமாண்ட வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


1000 கோடி ரூபாய் வசூலை எட்டுமா?


யாஷ் ராஜ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் வார்-2 திரைப்படம் நேரடியாக, அந்நிறுவனத்தால் கட்டமைக்கப்படும் ஸ்பை  யூனிவர்ஸ் திரைப்படங்களுன் இணைய உள்ளது. இந்த ஸ்பை யூனிவர்ஸில், ஏற்கனவே சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் ஹ்ருத்திக் ரோஷன் என பல முன்னணி நட்சத்திரங்கள் உள்ள சூழலில், தற்போது ஜுனியர் என்.டி.ஆரும் இணைவது படத்தின் வியாபாரத்தை பன்மடங்கு அதிகரிக்கும் என சினிமா வட்டரங்கள் தெரிவிக்கின்றன. இந்த யூனிவர்ஸை சேர்ந்த அண்மையில் வெளியான பதான் திரைப்படம், சுமார் 1000 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்தது. இதைதொடர்ந்து, அடுத்தாண்டு வெளியாக உள்ள வார்-2 திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலை மிக எளிதாக எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.