வகுப்புவாத அரசியலுக்கும், 40 சதவீத ஊழல் அரசுக்கும் எதிராக தான் வாக்களித்ததாகவும், மக்களை மனசாட்சியுடன் வாக்களிக்குமாறும் நடிகர் பிரகாஷ் ராஜ் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. கர்நாடகா மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சாமானிய மக்கள் என அனைவரும் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.
அந்த வகையில் கர்நாடகாவைச் சேர்ந்த நடிகரும் அரசியலில் ஈடுபாடு கொண்டவருமான பிரகாஷ் ராஜ், முன்னதாக தன் வாக்கினை செலுத்தியதுடன் இணையத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
பெங்களூரில் உள்ள சாந்தி நகர், செயிண்ட் ஜோசஃப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தன் வாக்கினை செலுத்திய பிரகாஷ் ராஜ் தொடர்ந்து பேசியதாவது: “நாம் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். நீங்கள் முடிவெடுக்க உரிமை உள்ள இடம் இது. நீங்கள் எப்போது, என்ன செய்ய வேண்டும், என்ன கஷ்டப்பட்டீர்கள், என்ன செய்தீர்கள் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். கர்நாடகா அழகாக இருப்பதை விரும்புங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள பிரகாஷ் ராஜ், “காலை வணக்கம் கர்நாடகா; நான் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக, 40 விழுக்காடு ஊழல் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளேன், உங்கள் மனசாட்சிப்படி நீங்கள் வாக்களியுங்கள், ஒட்டுமொத்த கர்நாடகாவுக்குமாக சிந்தித்து வாக்களியுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
ஐந்து தேசிய விருதுகளை வென்றுள்ள பிரகாஷ் ராஜை தன் நண்பரும் பெண் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் படுகொலை கடுமையாக பாதித்த நிலையில், அதன் எதிரொலியாக 2017ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு மத்தியத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பிரகாஷ் ராஜ் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். எனினும் தொடர்ந்து தன் சமூக வலைதளப் பக்கத்தில் பாஜக அரசின் செயல்பாடுகளை பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இன்று காலை 11 மணி வரை கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் 21 விழுக்காடு அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன. தென்னிந்தியாவில் பாஜக தலைமையில் ஆட்சி நடைபெறும் ஒரே மாநிலமான கர்நாடகாவில் வரும் 24ம் தேதியுடன் பதவிக்காலம் நிறைவடைகிறது.
இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 209 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 209 வேட்பாளர்களும், 918 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர். ஒரே ஒரு திருநங்கை போட்டியிடுகிறார்.