நடிகர் பிரதீப் ரங்கநாதனின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் டியூட் படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர் கேரளா சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இந்துத்துவ கும்பல் வைரலாக்கி வருகிறார்கள். தான் பீப் விரும்பி சாப்பிடுவதாக பிரதீப் ரங்கநாதன் கூறியதால் அவரை தர்ம துரோகி என விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவுகள் பகிரப்படுகின்றன.
தமிழ் மட்டுமில்லாமல் கேரளா , ஆந்திராவிலும் பெரியளவில் ரசிகர்களை சம்பாதித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். கடந்த அக்டோபர் மாதம் வெளியான டியூட் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது. அடுத்தபடியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள எல்.ஐ.கே படத்திற்கும் ரசிகர்களிடம் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
பீப் விரும்பி சாப்பிடுவேன்
டியூட் படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரதீப் ரங்கநாதன் கேரளா சென்றிருந்தார். அப்போது விமான நிலையத்தில் அவரை ரசிகர்கள் சூழந்து உரையாடினர். கேரளா உணவின் எது விரும்பி சாப்பிடுவீர்கள் என்று ரசிகர்களின் கேள்விக்கு பரோட்டாவும் பீபும் தனக்கு ரொம்ப பிடிக்கும் என பிரதீப் ரங்கநாதன் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்துத்துவ அமைப்பினர் சிலர் இந்த வீடியோவைப் பகிர்ந்து பிரதீப் ரங்கநாதனை தர்மத்தின் துரோகி என விமர்சித்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் பிரதீப் ரங்கநாதனின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்
எல்.ஐ.கே ரிலீஸ்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்.ஐ.கே திரைப்படம் டிசம்பர் 18 ஆம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாக இருந்தது. நாளை டிசம்பர் 19 ஆம் தேதி ஜேம்ஸ் கேமரூனின் அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படம் வெளியாக இருப்பதால் எல்.ஐ.கே படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி காதலர் தினத்தை ஒட்டி இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. சீமான் , கெளரி கிஷன் , க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே சூர்யா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். ரவுடி பிக்ச்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரின் ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன.