பட நிகழ்ச்சி ஒன்றில் பிரபல நடிகை நிதி அகர்வாலை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் அவர் காருக்குள் சென்று ஏறுவதற்குள் ஒருவழியாகி விட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதரபாத் நகரில் நடிகர் பிரபாஸ் நடித்து ரிலீஸூக்கு காத்திருக்கும் “தி ராஜா சாப்” படத்தின் இரண்டாவது பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கேற்ற நிலையில் அப்படத்தில் நடித்துள்ள நிதி அகர்வாலும் பங்கேற்றிருந்தார். சஹானா..சஹானா என தொடங்கும் அந்த பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி முடிந்தவுடன் நடிகை நிதி அகர்வால் அந்த இடத்திலிருந்து வெளியேற முடிவு செய்தார்.
ஆனால் வாசலில் அவரை ரசிகர்கள் சூழ்ந்துக் கொண்டனர். நிதி அகர்வாலை சுற்றி பவுன்சர்கள் இருந்தாலும் அவர்களாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அவர் திணறிப் போனார். அவர் மீது ரசிகர்கள் பாய்வது போல சென்றதால் நிதி அகர்வால் மிரண்டு போனார். ஒருவழியாக அவரை காருக்குள் சென்று பவுன்சர்கள் விட்டனர். உள்ளே சென்ற அவர் ஒரு கணம் தான் தப்பியதை நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்டார். அதேசமயம் நடந்த நிகழ்வுகளை கோபமாக கடிந்து கொண்டார்.
இந்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலானது. பலரும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களை கடுமையாக விமர்சித்துள்ளனர். நிதி அகர்வாலுக்கு ஏதாவது நிகழ்ந்திருந்தாலும் யார் பொறுப்பு, இது ஏற்றுக்கொள்ளவே முடியாது என தெரிவித்துள்ளனர். ரசிகர்களின் அன்பு என்றைக்கும் மகிழ்விக்க வேண்டும், மாறாக மிரட்டலாக இருக்கக்கூடாது. இதுபோன்ற இடங்களில் ரசிகர்கள் ஒழுக்கமுடன் நடந்து கொள்ள வேண்டும். ஒருவருக்கு பாதுகாப்பு, மரியாதையும் தரப்பட வேண்டும் என கூறியுள்ளனர்.
தி ராஜா சாப் படம்
பாகுபலி படத்துக்குப் பின் நடிகர் பிரபாஸ் நடிக்கும் படங்கள் மெஜா பட்ஜெட்டில் உருவானாலும் எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இப்படியான நிலையில் மாருதி இயக்கத்தில் அவர் தற்போது தி ராஜா சாப் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் மிக முக்கிய கேரக்டரில் சஞ்சய் தத் நடித்திருக்கிறார். அமானுஷ்ய காட்சிகள் நிறைந்த இப்படத்தின் டீசர் ரசிகர்களை கவர்ந்தது.
இந்த நிலையில் நிதி அகர்வால் தமிழில் சிம்பு நடித்த ஈஸ்வரன், உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத்தலைவன், ஜெயம் ரவி நடித்த பூமி ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.