கும்கி பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின் போது ரஜினியால் தான் கண் கலங்கிய சம்பவத்தை பிரபு பழைய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அந்த நிகழ்வு பற்றி காணலாம். 


கும்கி படம் 


கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கும்கி’ படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் நடிகராக விக்ரம் பிரபு அறிமுகமானார். மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து 3வது தலைமுறை நடிகராக அவர் அறிமுகமானது படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த படத்தில் லட்சுமி மேனன், தம்பி ராமையா, ஜோ மல்லூரி, அஸ்வின் என பலரும் நடித்திருந்தனர். 


டென்ஷனான ரஜினி.. பதறிய பிரபு 


இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றி நேர்காணல் ஒன்றில் நடிகர் பிரபு பேசியிருப்பார். அப்போது, “கும்கி படம் அப்பா (சிவாஜி) மற்றும் மக்களின் ஆசீர்வாதம் ஆகியவற்றால் சிறப்பாக அமைந்தது. அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை என்னால் மறக்க முடியாது. நான் அந்நிகழ்ச்சிக்காக அழைக்க ரஜினியை பார்க்க சென்றிருந்தபோது அவருக்கு உடல்நிலை சற்று சரியில்லாமல் இருந்தது. அதனால் முடிந்தால் வருகிறேன் என சொல்லி விட்டார்.


உடனே நான் கமலிடம் சென்று, ‘ரஜினி அண்ணே வரவில்லை..அதனால் நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் அண்ணன்’ என கட்டாயப்படுத்தி வர வைத்து விட்டேன். ஆனால் தயாரிப்பாளர் லிங்குசாமி, இயக்குநர் பிரபுசாலமன் என்னிடம் ரஜினி, கமல் இரண்டு பேரும் வந்தால் நன்றாக இருக்கும் என சொன்னார்கள். நான் எப்படிப்பா உடம்பு சரியில்லாம இருக்காரு, இப்பதான் வெளிநாட்டுல இருந்து வந்துருக்காரு எப்படி வருவாரு என நினைத்துக் கொண்டு அழைப்பிதழ் வைத்து விட்டு வந்து விட்டேன். திடீரென்று எனக்கு ரஜினியிடம் போன் வந்தது.


கடைசியில் நடந்த சிறப்பான சம்பவம் 


போனை எடுத்த என்னிடம், ‘நான் தான் வரமாட்டேன் என சொன்னனே..ஏன் அழைப்பிதழ் வைக்க வந்திங்க?’ என கோபமாக கேட்டார். நான், நீங்க வரலைன்னாலும் பரவால்ல.. ஆனால் அழைப்பிதழ் வைக்கிறது சம்பிரதாயம் என சொல்லவும் எதுவும் பேசாமல் போனை கட் செய்தார். எனக்கு ஒன்றுமே ஓடவில்லை. நான் உடனடியாக எங்க அண்ணன் ராம்குமாரிடம் தெரிவித்தேன். அவர் ஆடியோ நிகழ்ச்சி முடிந்ததும் பேசிக்கொள்ளலாம் என எனக்கு சமாதானம் சொன்னார். 


அடுத்தநாள் காலை சத்யம் தியேட்டரில் நிகழ்ச்சி நடந்தது. காலை 9 மணி நிகழ்ச்சிக்கு நான் 8.30 மணிக்கே சென்று விட்டேன். திடீரென அவரது உதவியாளர் சுப்பையாவிடம் இருந்து போன் வந்தது. நான் எடுத்து என்னவென்று கேட்டேன். ரஜினி பேச வேண்டும் என சொன்னதாக போனை அவரிடம் கொடுத்தார். நான் என்னவோ ஏதோ என்று பேசினேன். ரஜினி என்னிடம், ‘பிரபு எங்க இருக்கீங்க?’ என கேட்டார்.


நான் சத்யம் தியேட்டரில் இருக்கிறேன் என சொன்னேன். உடனே அவர், நான் வாசலில் தான் நிற்கிறேன். உள்ளே வரலாமா? என கூற, எனக்கு அழுகையே வந்து விட்டது. சொல்லிவிட்டு வந்து விட்டால் தெரிந்து விடுமே என முதல்நாள் என்னை மிரட்டி விட்டு மறுநாள் நடந்தது எல்லாம் மிராக்கிள் தான். அண்ணேன் என அவரை கட்டிப்பிடிக்க, என்ன பயந்துட்டீங்களா என கூலாக ரஜினி கேட்டார். அன்றைய நாள் எங்க அப்பா எங்களுடன் இருந்ததாக நான் உணர்ந்தேன். ரொம்ப எமோஷனலா இருந்துச்சு