தி லெஜண்ட் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் நடிகர் பிரபு பேசிய வீடியோவை நடிகர் லெஜண்ட் சரவணன் வெளியிட்டுள்ளார். 






தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளான ஹன்சிகா மற்றும் தமன்னாவுடன் இணைந்து விளம்பரம் ஒன்றில் அதிரடியாக எண்ட்ரி கொடுத்து அடுத்து பிற ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களின் முதலாளிகளையும் விளம்பரத்தில் நடிப்பதற்கு முன்னுதாரணமாக இருந்தவர் “லெஜண்ட் சரவணன்”. இதனைத் தொடர்ந்து இவரின்  சினிமா எண்ட்ரி குறித்த அறிவிப்பு வெளியானது. சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களின் விளம்பரங்களை இயக்கி வந்த இரட்டை இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி தான் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசை, விவேக், பிரபு முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. 






மேலும் தி லெஜண்ட் என பெயரிடப்பட்ட இப்படத்தில் ஹீரோயின்களாக ஊர்வசி ரவுடேலா, கீதிகா திவாரி இருவரும் நடிக்க லட்சுமி ராய், யாஷிகா ஆனந்த் ஆகியோர் ஒருபாடலுக்கு நடனமாடினர். தி லெஜண்ட் படத்தின் இசை வெளியிட்டு விழா மே 29 ஆம் தேதி தமிழ் சினிமாவின் 10 ஹீரோயின்கள் பங்கேற்க மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. படத்தின் பாடல்களும் வெளியாகி ஹிட்டான நிலையில் படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது. 


இதற்கிடையில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி படம் வெளியானது. சுமார் 5 மொழிகளில்  2500 தியேட்டர்களில் படம் வெளியானதால் ரசிகர்கள் சரவணன் அப்படி என்ன செய்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்காகவே தியேட்டர்களுக்கு படையெடுக்க தொடங்கினர். படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியானது. வெற்றி, தோல்வி பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது அடுத்தப்பட வேலைகளில் எல்லாம் சரவணன் கவனம் செலுத்த தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில் நடிகர் லெஜண்ட் சரவணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தி லெஜண்ட் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் நடிகர் பிரபு பேசியதை வெளியிட்டுள்ளார். அதில் பிரதர் லெஜண்ட் பற்றி சொல்லணும்ன்னா ரொம்ப நல்ல மனசு உள்ளவரு. ஏன்னா...விவேக்குடன் இவர் 7, 8 நாட்கள் தான் பழகினார். கடைசியாக விவேக்கின் இறுதிச்சடங்கு அத்தனையும் செஞ்சது நம்ம தம்பி தான். யாருடனாவது கொஞ்ச நேரம் பழகினால் கூட அவங்க கூட வாழ்க்கை முழுவதும் பழகணும்ன்னு நினைப்போட இருப்பாரு. அப்படி ஒரு நல்ல மனசு உள்ளவர் என தெரிவித்துள்ளார். 


கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி  நடிகர் விவேக் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் மரணத்திற்கு முன்பாக தி லெஜண்ட் படத்தில் தான் கடைசியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.