நடன இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், திரைப்பட இயக்குநர் என்று பன்முக கலைஞராக திகழ்பவர் பிரபு தேவா. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 30 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
தனது ஸ்டைலிஷான நடனத்தால் ஆச்சரியப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருது பெற்றார். அதோடு டான்ஸில் சிறந்த பங்களிப்பு அளித்ததற்காக 2019 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீவிருதும் பெற்றார். இந்து படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான பிரபுதேவாவிற்கு காதலன், மிஸ்டர் ரோமியோ, விஐபி, வானத்தை போல, ஏழையின் சிரிப்பில், பெண்ணின் மனதை தொட்டு என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் பிஸியான நடிகராக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தார்.
இப்போது அவரைப் போன்று அவருடைய மகனும் சினிமாவில் கொடிகட்டி பறக்க ஆசைப்பட்டுள்ளார். ஆம் அவருடைய மகன் ரிஷி ராகவேந்தர் தேவா சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இது குறித்து பிரபு தேவா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: என்னுடைய மகனுக்கு சினிமா என்றாலே பிடிக்காது. நான் டான்ஸ் ரிகர்ஷல் போகும் போது கூட வாடா என்று கூப்பிட்டால் போங்க அப்பா, நீங்க டான்ஸ் ஆடி நான் என்ன பாக்குறது என்று சொல்லுவான். அப்படி சொல்லிக் கொண்டிருந்தவன் இப்போது சினிமாவுல நடிக்க வேண்டும் என்று சொல்கிறான்.
ஒரு வருடத்திற்கு முன்பு அப்பா நான் ஹீரோ ஆகணும் என்று சொன்னான். எனக்கு ஒரே ஆச்சரியம். ஆனால், என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் சினிமா ரொம்பவே கஷ்டம். அவனாகவே கஷ்டப்பட்டு கடின உழைப்பின் மூலமாக சினிமாவிற்கு வர வேண்டும் என்று நான் எந்த சிபாரிசும் செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார்.
அப்படியெல்லாம் சொன்ன பிரபுதேவா ஒரு மேடையில் அவருடை மகனை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த மேடையில் அவர் டான்ஸ் ஆடியிருக்கிறார். ஆம், சென்னையில் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் வடிவேலு, தனுஷ், இயக்குநர் ஷங்கர், எஸ் ஜே சூர்யா ஆகியோர் பலரும் கலந்து கொண்டனர். பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி என்பதால் ஏராளமான நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் பிரபுதேவா தனது மகன் ரிஷி ராகவேந்தர் தேவாவை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதுவும் பிரபுதேவாவின் பேட்ட ராப் பாடலுக்கு டான்ஸ் ஆடும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகன் ரிஷி ராகவேந்தர் தேவாவை அறிமுகம் செய்வது மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். சினிமாவில் வாரிசு நடிகர்களின் வாரிசுகள் அடுத்தடுத்து நடிப்பின் பக்கம் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அந்த வரிசையில் கூடிய விரைவில் பிரபு தேவா மகனும் இணைவது கிட்ட தட்ட உறுதியாக உள்ளது.