அயோத்தியில் பல ஆண்டு காலமாக சர்ச்சைக்குரிய ஒரு இடத்திற்கு சட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு அந்த இடத்தில் ராம ஜென்மபூமி கோயிலை கட்ட சொல்லி உச்சநீதிமன்றம் அறக்கட்டளைக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பேரில் மிகவும் பிரமாண்டமான ராமர் கோயிலை அந்த நிலத்தில் கட்ட முடிவெடுக்கப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. 


குடமுழுக்கு விழா :


2020ம் ஆண்டில் பூமி பூஜை நடைபெற்று அடிகள் நாட்டப்பட்டது. சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் ராமர் கோயில் கட்டிட பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்தது. கோயில் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் வரும் ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ளன. 


 



அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு நாட்டில் உள்ள பல்வேறு  வி.வி.ஐ.பி.க்கள், துறவிகள் மற்றும் நாட்டின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை. 


வி.ஐ.பி.க்கள் யார் யார் ?


அந்த பட்டியலில் திரையுலகை சேர்ந்த பலருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், ரன்பீர் கபூர், ஆலியா பட், டைகர் ஷெராஃப், சன்னி தியோல், அஜய் தேவ்கன், ஆயுஷ்மான் குரானா, கங்கனா ரனாவத், சஞ்சய் லீலா பன்சாலி, ரோஹித் ஷெட்டி, ராஜ்குமார் ஹிரானி கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் ரத்தன் டாடா , முகேஷ் அம்பானி,  கௌதம் அதானி உள்ளிட்ட பலர் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 


இந்த கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க நடிகர் பிரபாஸுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 


 



ஆதிபுருஷ் பிரபாஸ் :


பான் இந்தியன் நடிகராக புகழின் உச்சியில் இருக்கும் நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சலார்'. படம் வெளியான நான்கு நாட்களில் சுமார் 450 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராவணனை ராமன் வீழ்த்தும் ராமாயண புராண கதையை மையமாக வைத்து கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இப்படத்தில் ராமனாக பிரபாஸ் நடிக்க, ராவணனாக சைஃப் அலி கான் மற்றும் சீதாவாக கிருத்தி சனோன் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.