பிக்பாஸ் (Bigg Boss 7 Tamil) இல்லம் அதன் போட்டியாளர்களுடன் 85 நாள்களைக் கடந்து 86ஆவது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. மாயா, பூர்ணிமா, மணி, ரவீனா, விசித்ரா, அர்ச்சனா, விஜய் வர்மா, விஷ்ணு, தினேஷ் ஆகிய போட்டியாளர்கள் தற்போது போட்டியில் தொடர்ந்து வருகிறார்கள்.


பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டாஸ்க்குகள் தாண்டியும் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த வார வீக் எண்ட் எபிசோடில் சரவண விக்ரம் பெரும் அதிருப்தியுடன் வெளியேறினார். டிக்கெட் டு ஃபினாலேவுக்கான முன்னோட்டம் சென்ற வாரமே தொடங்கி நடைபெற்ற நிலையில், அர்ச்சனா, விஜய் வர்மா இருவரும் இந்த டாஸ்க்கில் பங்கேற்பதற்கான வாய்ப்பினை ஏற்கெனவே இழந்துள்ளனர். இந்நிலையில், இன்று தொடங்கி டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்குகள் மீண்டும் தீவிரமடைகின்றன. 


இதனிடையே சென்ற வார வீக் எண்ட் எபிசோட்களைத் தொடர்ந்து சில பஞ்சாயத்துகள் பிக்பாஸ் வீட்டுக்குள் தொடர்ந்து வருகின்றன. அதன்படி சென்ற வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒருசேர சென்ற வாரம் அதிகம் வீட்டு வேலைகளில் பங்களிக்காத நபராக அர்ச்சனாவைத் தேர்ந்தெடுத்தனர்.


அர்ச்சனா (Archana) வழக்கம்போல் இதற்கு ரியாக்ட் செய்து “இனி நான் பார்த்துக் கொள்கிறேன்” என வீக் எண்ட் எபிசோடில் பேசிய நிலையில், தினேஷூம், விசித்ராவும் அவருக்கு பொறுமையாக எடுத்து விளக்கினர். “நீ உனக்கு ஒரு வேலை கொடுத்தால் மற்றவர்களிடம் நாலு வேலை வாங்குகிறாய்” என விசித்ரா - தினேஷ் இருவரும் கூறியும் அர்ச்சனா விளங்கிக் கொள்ளவில்லை.


இந்நிலையில் ரவீனா நேற்று இதுபற்றி அர்ச்சனாவிடமே நேரடியாக எடுத்துக் கூறினார். மேலும் “நீங்க உட்கார்ந்துக்கிட்டே வேலை வாங்கறீங்க, அதேபோல் குழந்தைகள் வந்தபோது என்ன பத்தி தப்பா சொல்லிக் கொடுத்ததால் அந்த குழந்தைங்க என்கிட்ட பேசவே இல்ல” எனவும் ஆதங்கத்துடன் கூறினார்.


அர்ச்சனா - ரவீனாவின் இந்த உரையாடல் முடிந்ததும், அருகில் அமர்ந்திருந்த விசித்ரா இதுபற்றி அர்ச்சனாவிடம் உரையாடினார். “நீ உன் தங்கச்சி பிக்பாஸ் வீட்டுக்கு வந்தப்பவும் அவங்களயும் இப்படி தான் வேலை வாங்கின, அதனால எல்லாரும் இதுதான் உன் கேரக்டரேனு நினச்சிருப்பாங்க” எனக் கூற, அர்ச்சனா சடாரென அழத் தொடங்கினார்.


“நான் என் தங்கச்சியிடம் எப்பவுமே அப்படி தான் செய்வேன். எனக்கு யாராவது இப்படி எல்லாம் செஞ்சு பார்த்துக்கிட்டா பிடிக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு லவ் லேங்குவேஜ். இது என்னுடைய லவ் லேங்குவேஜ்” எனக் கூறி மீண்டும் தன் அழுகை ஆயுதத்துடன் களமிறங்கி விட்டார் அர்ச்சனா.


இந்நிலையில் முட்டை ஏரியாவுக்கு வந்த ரவீனா “இவங்க இப்படி செய்வாங்கனு பயந்து தான் எதுவுமே சொல்லாம இருந்தோம், இப்போ மறுபடி அழ ஆரம்பிச்சிட்டாங்க” என நொந்து கொண்டார்.


ஆனாலும் ரவீனாவின் இந்த செயலை சக ஹவுஸ்மேட்ஸ்களான தினேஷ், விஷ்ணு இருவரும் ஆதரித்து ஆறுதலாகப் பேசினார். இனி இந்த வீட்டில் அழவே மாட்டேன் என சபதமிட்ட அர்ச்சனா, இந்த வார தொடக்கத்திலேயே அழுதுள்ள நிலையில், இந்த வாரம் முழுவதும் இப்படியே கடத்தப்போகிறாரா என ஆயாசமாக எதிர்நோக்கி காத்துள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள்!