பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் பிரபாஸ். பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 வெற்றி பிரபாசிற்கு என்று இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது.


பின்னடைவில் பிரபாஸ்:


ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர் ரசிகர்களுக்கு எந்தவொரு எதிர்பார்ப்பபையும் ஏற்படுத்தாத நிலையில், பிரபாஸ் என்ற ஒற்றை காரணத்தால் மட்டும் படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தனர். கதை நம் அனைவருக்கும் தெரிந்தது என்றாலும், படத்தின் தொழில்நுட்ப பணிகள், கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களை பெரியளவில் கட்டி இழுக்கவில்லை.


மேலும், அனுமருக்கு சீட்டு, ராவணனன் கெட்டப் என்று பல வித காரணங்களால் ஆதிபுருஷ் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடித்த சாஹூ, ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் தோல்வி அடைந்ததால் ஆதிபுருஷ் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. மேலும், கட்டாய வெற்றி தர வேண்டிய நெருக்கடியில் இருந்த பிரபாஸ்க்கு ஆதிபுருஷ் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது.


அடுத்தடுத்த தோல்வி:


இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகிய இந்த படம் வார விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை வரை பிரபாஸ் ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்தனர். ஆனால், திங்கட்கிழமையான நேற்று பெரும்பாலான திரையரங்குகள் காற்று வாங்கியது என்பதே உண்மை. குறிப்பாக, தெலுங்கு தவிர பிற மொழிகளில் வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் பெரியளவில் வருகையை முதல் மூன்று நாட்களே தரவில்லை என்பதே உண்மை.


வசூல் இத்தனை கோடிகளை குவித்தது என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் உலா வந்தாலும், ஏ, பி மற்றும் சி சென்டர் ரசிகர்களை வசீகரித்ததா? என்றால் நிச்சயம் இல்லை என்பதே பதில். பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடித்து வெளியான திரைப்படங்களிலே ரசிகர்களால் அதிக விமர்சனங்களை எதிர்கொண்ட படமாக ஆதிபுருஷே இருக்கும். ஏனென்றால், சாஹூ அதிரடி படமாக இருந்தாலும் பாகுபலியால் உருவான எதிர்பார்ப்பை சாஹூ நிறைவேற்றவில்லை என்பதால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.


அதற்கு அடுத்து காதல் காவியமாக உருவான ராதேஷ்யாம் திரைப்படமும் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாததால் அந்த படமும் தோல்வி அடைந்தது, ஒரு வேளை பாகுபலிக்கு முன்பே சாஹூ மற்றும் ராதே ஷ்யாம் திரைப்படங்கள் வெளியாகியிருந்தால் அந்த படங்கள் வெற்றி படங்களாக கூட இருந்திருக்கலாம். ஆனால், பாகுபலியின் வெற்றி அலையிலே அந்த படங்கள் தோல்வி அடைந்தது கூட என்று கூறலாம். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் ஹாட்ரிக் தோல்வியை தழுவியிருப்பதால் அவர் பாகுபலி அளவிற்கு கம்பேக் தர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.


ப்ளாக் பஸ்டர் ஆகுமா சலார்?


கே.ஜி.எஃப். படம் மூலமாக பிரபலமான பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் தற்போது நடித்து வருகிறார். சலார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரசாந்த நீல் இயக்கிய உக்ரம், கே.ஜி.எஃப். 1, கே.ஜி.எஃப் 2 ஆகிய 3 படங்களும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் சலார் படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் பிரபாஸ் ரசிகர்களும், கே.ஜி.எஃப். ரசிகர்களும் உள்ளனர்.


சலார் படத்தை பெரிய அளவில் நம்பியுள்ள பிரபாசிற்கும், பிரபாஸ் ரசிகர்களுக்கும் மாபெரும் வெற்றி கிட்டுமா? பிரபாஸ் மீண்டும் சலாரில் கம்பேக் தருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


மேலும் படிக்க: Leo: 2000 டான்சர்களுடன் 7 நாள் ஷூட்டிங்... நா ரெடி பாடலுக்காக சொன்னதை செய்த விஜய்.. மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்!


மேலும் படிக்க: Indian 2: சென்னை ஏர்போர்ட்டில் நடைபெற்று வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு... அனுமதிக்கு இவ்வளவு கோடி!