பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் பிரபாஸின் ‘சலார்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவாக உள்ள பிரபாஸ், பாகுபலி படத்திற்கு அனைத்து மொழி ரசிகர்களுக்கும் நன்கு பரீட்சையமான ஒருவராக மாறினார். அப்படத்தை தொடர்ந்து அவர் நடித்து வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம், மற்றும் சமீபத்தில் வெளியான ஆதிபுருஷ் படங்கள் தோல்வியடைந்தது. இதனால் எப்படியாவது மீண்டும் வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் பிரபாஸ் கவனமுடன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். 


சலார் படம் 


அந்த வகையில் கேஜிஎஃப் முதல் மற்றும் 2 ஆம் பாகம் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் ‘சலார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு  உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் சலார் படத்தை ஹம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார். இந்த படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சந்தேகத்தை ஏற்படுத்திய நேரம் 


அதேசமயம் இப்படம் கேஜிஎஃப் படத்தின் ஓர் அங்கமாக இருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர். அதற்கு காரணம் சில தினங்களுக்கு முன்பு படத்தின் டீசர் ஜூலை 6 ஆம் தேதி அதிகாலை 5.12 மணிக்கு வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஏன் சம்பந்தமே இல்லாமல் அதிகாலை நேரத்தில் டீசர் வெளியாகிறது என பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பினர். 


ஆனால் சிலரோ, கேஜிஎஃப் படத்தின் 2 ஆம் பாகத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் ஹீரோ யஷ் கப்பலை ஓட்டிக் கொண்டு இருப்பார். அப்போது அருகிலுள்ள கடிகாரத்தில் அதிகாலை 5 மணி என இருக்கும். இதனால் கேஜிஎஃப் படத்துக்கும், சலார் படத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது என ரசிகர்கள் உறுதியாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 


வெளியான டீசர்


இந்நிலையில் சலார் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் கேஜிஎஃப் படத்தை நியாபகப்படுத்துவது போல உள்ளது. மேலும் இதற்கான கொண்டாட்டங்கள் சமூக வலைத்தளங்களில் நள்ளிரவே தொடங்கிய நிலையில், பலரும் கேஜிஎஃப் படத்துடன் டீகோட் செய்து வருகின்றனர். இந்த படம் பிரபாஸ்க்கு வெற்றிப்படமாக அமையும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.