செந்தூரப்பாண்டி படத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தைப் பார்த்து தனக்கு அழுகையே வந்துவிட்டதாக நடிகர் பொன்னம்பலம் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதனைப் பற்றி காணலாம். 


1993 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படம் “செந்தூரபாண்டி”. இந்த படத்தில் யுவராணி, விஜயகுமார், மனோரமா, எஸ்.எஸ்.சந்திரன், பொன்னம்பலம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். விஜயகாந்த் மற்றும் கௌதமி இருவரும் கேமியோ ரோலில் வந்தனர். தேவா இசையமைத்த இப்படம் விஜய்க்கு மக்களிடம் நல்ல அறிமுகத்தைப் பெற்றுக் கொடுத்தது. குறிப்பாக தன் மீது கொண்ட அன்பால் விஜய்யை மக்களிடம் கொண்டு சேர்க்க விஜயகாந்த தான் சரியாக ஆள் என்பதை உணர்ந்த எஸ்.ஏ.சி.  அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினார். 


இந்த படத்தில் வில்லனாக நடித்த பொன்னம்பலம் நேர்காணல் ஒன்றில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை பற்றி பேசியிருப்பார். அதாவது, “செந்தூரப்பாண்டி படத்தின் கதையை கேட்பதற்காக எஸ்.ஏ.சந்திரசேகர் அலுவலகம் சென்றிருக்கிறேன். என்னை அழைத்து என்னோட கேரக்டர், படத்தின் கதை, எவ்வளவு பட்ஜெட் எல்லாம் சொல்லி நான் சொல்ற சம்பளத்துக்கு ஓகே என்றால் படம் பண்ணாலாம் என எஸ்.ஏ.சந்திரசேகர் என்னிடம் சொல்லி விட்டார். அப்போது கால் உடைந்து ஒரு வருடம் வேலை இல்லாமல் இருந்தேன். எனக்கோ ஒரு ரூ.50 ஆயிரம் கொடுத்தால் போதும் என்பது போல இருந்தது. எனக்கு கொஞ்சம் கடன் இருந்தது. அதனை அடைத்தால் போதும் என்று இருந்தேன். ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகர், “எதுவும் பேசக்கூடாது. நான் என்ன சொல்கிறனோ அதுதான் சம்பளம். என்னைப் பற்றி வெளியே கேட்டுப்பார். சொன்னதை சரியாக கொடுத்திருவேன். விஜயகாந்த் வேறு உன்னை சொல்லியிருக்காரு” என கூறி என்னிடம் செக் ஒன்று அடங்கிய கவரை நீட்டினார். 


படத்தில் மெயின் வில்லன் கேரக்டர் என்பதாலும், விஜயகாந்த் சொன்னதாலும் சரி எதுனாலும் ஓகே தான் நானும் வாங்கினேன். இதை இங்கே வைத்து பிரித்து அதில் இருக்கும் தொகை பற்றி மனஸ்தாபம் ஏற்படலாம். அதனால் வீட்டுக்கு சென்று பார் என எஸ்.ஏ.சி என்னிடம் சொல்லவும் நானும் எதுவும் பேசாமல் வந்து விட்டேன். 


வீட்டில் பூஜையறையில் வைத்து நான்கு நாட்கள் கழித்து கவரை பிரித்து பார்த்தால் செக்கில் ரூ.1 லட்சம் எழுதியிருந்தது. அது அட்வான்ஸ் மட்டுமே. என்னால் நம்பவே முடியவில்லை.சரி என அக்ரீமெண்ட்டை வாங்கி பார்த்தால் ரூ.2.75 லட்சம் சம்பளம் என இருந்தது. எனக்கு அழுகையே வந்துவிட்டது” என பொன்னம்பலம் தெரிவித்தார்.