உலகத்தில் எதையும் முதலாவதாக தமிழன் செய்யக்கூடாது என தமிழனே நினைக்கிறான் என நடிகர் பார்த்திபன் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் இயக்குநர் பார்த்திபனும் ஒருவர். இவர் தற்போது எழுதி இயக்கி, நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் தான் “ இரவின் நிழல்”. உலகிலேயே முதல், “நான் லீனியர் சிங்கிள் ஷாட்” படமாக உருவான இந்தப்படம் கடந்த ஜூலை 15 ஆம் திரையரங்குளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
இந்த படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதனிடையே பார்த்திபனிடம் உதவி இயக்குநராக வேலை செய்ய வந்த பிரிகிடாவுக்கு இரவின் நிழலில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தார். இதற்கிடையில் நடிகர் பார்த்திபன் தமிழகம், புதுச்சேரியில் உள்ள தியேட்டருக்கு சென்று ரசிகர்களை நேரில் சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் புதுச்சேரியில் இரவின் நிழல் வெளியான ஒரு திரையரங்திற்கு நடிகர் பார்த்திபன் நேற்று வருகை தந்தார். அவருடன் நடிகை பிரிகிடாவும் வந்திருந்தார். பார்த்திபனுக்கு பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ரசிகர்களுடன் அமர்ந்து சில நிமிடங்கள் படத்தை பார்த்திபன் பார்த்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபன், புதுச்சேரி ரசிகர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படம் வெளியான மூன்று நாட்களில் நல்ல வசூலை பெற்றுள்ளது. மேலும் பெரிய கமர்ஷியல் திரைப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. என்னுடைய வாழ்க்கையில் புதிய பாதைக்கு அடுத்தபடியாக 32 ஆண்டுகளுக்கு பிறகு இத்திரைப்படம் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இது நான் லீனியர் என சொல்லக்கூடிய சிங்கிள் ஷாட் சினிமா. ஆனால் சிலர் உலகிலேயே இதுதான் முதல் நான் லீனியர் சினிமா இல்லை என தவறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். உலகளவில் முதல் படத்தை ஒரு தமிழன் செய்யக்கூடாது என்று ஒரு தமிழனே நினைக்கிறான் என்றால் இதைவிட மோசமான காரியம் இல்லை என வேதனை தெரிவித்தார். மேலும் எதையும் நாம் செய்ய முடியாது. வெளிநாட்டினவர் மட்டுமே செய்ய முடியும் என நம்புகின்றனர். நம்மிடம் அனைத்து திறமையும் உள்ளது. நாம் எதையும் செய்யலாம் என்று பார்த்திபன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்