ராஞ்சனா பட ஷூட்டிங்கில் தனுஷ் ஆடிய டான்ஸை பார்த்து 7 ஆயிரம் பேர் கைதட்டி பாராட்டினார்கள் என நடிகரும், ஒளிப்பதிவாளருமான நடராஜன் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 


கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியின் ராஞ்சனா என்ற படம் வெளியானது. ஆனந்த் எல். ராய் இயக்கிய இப்படத்தில் தனுஷ், சோனம் கபூர், அபேய் தியோல், விபின் சர்மா, அரவிந்த் கவுர், குமுத் மிஸ்ரா என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக நடராஜன் சுப்பிரமணியம் பணியாற்றிருந்தார். 






இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் ராஞ்சனா படத்தின் ஷூட்டிங்கில் மறக்க முடியாத நிகழ்வுகளை பற்றி பேசினார். அதில், “ராஞ்சனா படத்தில் சோனம் கபூருக்கு பள்ளி காலத்தில் தனுஷ் ப்ரோபோஸ் பண்ற மாதிரி ஒரு காட்சி இருக்கும். காசியில் உள்ள பனாரஸில் தான் அந்த காட்சியை நாங்கள் எடுத்தோம்.


எப்போதும் சினிமாவில் பனாரஸின் ஒரு பக்கம் மட்டுமே காட்டுவார்கள். அந்த பக்கம் வழிபாட்டுத்தலங்கள் இருப்பதால் பெரிதாக காட்ட மாட்டார்கள். அங்கிருக்கும் கடவுள்களை மட்டும் காட்சிப்படுத்துவார்கள்.


நாங்கள் அங்கே போய் ஷூட் பண்ணினோம். நாங்க ஷூட்டிங் எடுத்துக் கொண்டிருக்கும்போது அந்த இடத்தில் மட்டும் சுமார் 7 ஆயிரம் பேர் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இந்தி படம் என்பதால் நிறைய பேர் கூடியிருக்கிறார்கள். 


அந்த காட்சியில் டீ கடையில் ஒரு இந்தி பாட்டு ஓடும். அதன் வழியாக தனுஷ் சோனம் கபூருக்கு தன் காதலை சொல்ல வேண்டும் என்றபடி காட்சி இருந்தது. அந்த டான்ஸை அவர் ரிகர்சல் பார்க்கவில்லை. நான் எங்கே சென்றாலும் கேமராவை கொண்டு வருவீர்களா என தனுஷ் என்னிடம் கேட்க, சரி ஓகே என நான் சொன்னேன். அந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடி முடிந்ததும் சுற்றியிருந்த அந்த மக்கள் 7 ஆயிரம் பேரும் கைதட்டி பாராட்டினார்கள்” என தெரிவித்துள்ளார். 


இப்படியாக தனுஷ் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நடராஜன் சுப்பிரமணியம்தான், அவர் நடித்த கர்ணன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.