மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகளில் இலவசமாகப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மே 28ஆம் தேதி குலுக்கல் நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.


ஆர்டிஇ எனப்படும் குழந்தைகளுக்கான  இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011-ன்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 7,283 தனியார் பள்ளிகளில் சுமார் 80,000 இடங்கள் உள்ளன.


இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது 1-ம் வகுப்பில் சேர்பவர்கள் 8-ம் வகுப்பு வரை இலவசமாகப் படிக்கலாம். தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு இந்தத் திட்டம் அமலுக்கு வந்தது. அப்போதில் இருந்து ஆர்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை 4.60 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.


ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்காக மே மாதத்தில் இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இருக்கும் இடங்களைக் காட்டிலும் அதிக மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது, குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவது நடக்கும்.


மே 29-ல் பெயர் வெளியீடு


இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் மே 29-ம் தேதி இணையத்தில் வெளியிடப்படும். இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் மே 28ஆம் தேதி, விண்ணப்பிக்கப்பட்ட பள்ளியில் குலுக்கல் முறையில் மாணவர்களின் சேர்க்கை நடைபெற உள்ளது.


இதுகுறித்துச் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’2024 -2025ஆம் கல்வி ஆண்டில் சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 636 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர்க்கை மேற்கொள்ள 22.04.2024 முதல் 20.05.2024 வரை இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


9051 விண்ணப்பங்கள்


அவ்வாறு பெறப்பட்ட 10,342 விண்ணப்பங்களில் 9051 தகுதியான விண்ணப்பங்களாக கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிகளின் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களை (Intake Capacity)  விட அதிகமாக இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 28.05.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று விண்ணப்பக்கப்பட்ட பள்ளியில் குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது.


இணைய வழியில் விண்ணப்பித்துள்ள பெற்றோர்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களுடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 1.30 லட்சம் மாணவர்கள், 80 ஆயிரம் இடங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.