வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகாவுக்குட்பட்ட சென்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த டீ மாஸ்டர் சசிகுமார். இவருடைய மனைவி சத்யா வயது (41). எம்.ஏ.வரலாறு பட்டம் பெற்றுள்ள சத்யா வேலைக்கு செல்லாமல் குடும்பத்தை கவனித்து வந்துள்ளார் . இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். மகன் பி.டெக் முதலாம் ஆண்டு படிக்கிறார். மகள் தற்போது பிளஸ்-2 முடித்துவிட்டு உயர்க்கல்விப் பயிலவிருக்கிறார். பிள்ளைகளின் கல்வி மற்றும் தொழில் காரணமாக குடியாத்தம் எழில் நகரில் தங்கியிருந்தனர். இந்த நிலையில், கடுமையான தலைவலியால் அவதிப்பட்டுவந்த சத்யா, கடந்த 17-ம் தேதி வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 3 நாள்கள் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்ட சத்யாவுக்கு திடீரென உடல்நிலை மிகவும் மோசமாகியது. இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி பிற்பகல் மூளைச்சாவு ஏற்பட்டிருக்கிறது.
சத்யாவின் உறுப்புகள் 6 பேருக்கு மறுவாழ்வு
பின்னர் சத்யாவின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க கணவரும், பிள்ளைகளும் முன்வந்தனர். அதனைத்தொடர்ந்து, சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு இதயம் மற்றும் நுரையீரல், ராணிப்பேட்டை சி.எம்.சி வளாக மருத்துவமனைக்கு கல்லீரல் மற்றும் இடது பக்க சிறுநீரகம், வேலூர் ஸ்ரீநாராயணி மருத்துவமனைக்கு வலது பக்க சிறுநீரகமும், வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு கண்களும் தானமாக பெற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், சத்யாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊரான சென்னங்குப்பம் கிராமத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. சத்யாவின் குடும்பத்துக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இரங்கல் தெரிவித்தார்.
சத்யாவின் உடலுக்கு அரசு மரியாதை
பின்னர், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி மற்றும் கே.வி.குப்பம் தாசில்தார் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டு சத்யாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து உறுப்பு தானத்துக்கான உரிய மரியாதை செய்தனர். ``இறப்பிற்கு பிறகு உடல் உறுப்பு தானம் செய்யும் நபர்களின் இறுதிச் சடங்கில் அரசு சார்பில் மலர் வளையம் செலுத்தி அஞ்சலி செலுத்தப்படும்’’ என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன் அடிப்படையில்தான், சத்யாவின் உடலுக்கும் அரசு மரியாதை செய்யப்பட்டிருக்கிறது. சத்யாவின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவர் மறைந்தும் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.