திரைப்பட ஊழியர்கள் சங்கத்தின் புதிய நெறிமுறைகளைத் தொடர்ந்து பவன் கல்யாண் பேசியதை மறுத்து விளக்கமளித்துள்ளார் நடிகர் நாசர்.
ப்ரோ படத்தின் முன்னோட்ட நிகழ்வில் நடிகர் பவன் கல்யாண் தமிழ் படங்களில் மற்ற மொழி நடிகர்களைவிட தமிழ் நடிகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்கிற தென் இந்திய திரைப்பட ஊழியர்கள் சங்கம் சார்பாக முன்வைக்கப்பட்ட புதிய நெறிமுறைகளை சுட்டிகாட்டி பேசினார்.
பவன் கல்யானின் கோரிக்கை
தனது பேச்சைத் தொடங்கிய பவன் கல்யாண் “தமிழ் சினிமா தன்னை ஒரு சிறு வரம்பிற்குள் சுருக்கிக்கொள்வதாக நினைக்கிறேன். அதே நேரத்தில் தெலுங்கு சினிமா அனைத்து மொழிகளைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அரவணைத்து வருகிறது.
தமிழ் சினிமாத் துறை அனைத்து சாரார்களையும் உள்ளடக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அதன் வளர்ச்சி தடைபடும். தெலுங்கு சினிமா முன்னேறுவதற்கான முக்கிய காரணம் பல்வேறு நிலத்தில் இருந்து வரும் கலைஞர்களை அது ஆதரிப்பதே. இங்கு மிகப்பெரிய அடையாளங்களை சம்பாதித்திருக்கும் சமுத்திரகனி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், சுஜித் வாசுதேவன் மலையாள, ஊர்வஷி ராவ்டலா வட மாநிலத்தில் இருந்து வந்தவர், மற்றும் நீதா லல்லா பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர். இதுபோல் பல நிலங்களில் இருந்து கலைஞர்கள் ஒன்றிணைந்து பனியாற்றும்போது ஒரு படம் அசாதாரணமான உயரத்தைத் தொடுகிறது. அதனால் இது மாதிரியான குறுகிய சிந்தனைகளை விட்டு ஆர். ஆர்.ஆர் போன்ற படங்களை உருவாக்க முயற்சிக்க வேண்டும் என தென் இந்திய திரைப்பட ஊழியர்கள் சங்கத்திடம் நான் இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன்” என பேசினார்.
விளக்கமளித்த நாசர்
திரைப்பட ஊழியர்கள் சங்கத்தின் இந்த முடிவு குறித்து எந்த விதமான விளக்கமும் அளிக்கப்படாத நிலையில் தற்போது நடிகர் நாசர் இந்தக் குழப்பத்திற்கு விளக்கமளித்துள்ளார். ”பிற மொழி நடிகர்களை தமிழில் நடிக்க அனுமதிக்க கூடாது என்று திரைப்பட ஊழியர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளதாக தவறான தகவல் ஒன்று பரவி வருகிறது. அப்படியான ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அதை முதலில் எதிர்ப்பவன் நானாகத்தான் இருப்பேன். தற்போது பான் இந்திய திரைப்படங்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்த மாதிரியான ஒரு சூழலில் அனைத்து மொழிகளில் இருந்தும் நடிகர்கள் தொழில் நுட்பக்கலைஞர்கள் நமக்கு தேவையான ஒரு சூழலில், இந்த மாதிரியான ஒரு முடிவை யாரும் எடுக்கமாட்டார்கள். திரைப்படங்கள் தமிழ்நாட்டைத் தவிர்த்து பிற மாநிலங்களிலும் எடுக்கப்படுகின்றன. இதன் காரணத்தினால் தொழிலாளர்களின் நலனை நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. சாவித்திரியின் காலத்தில் இருந்து தமிழ் சினிமா பிற மொழி கலைஞர்களுடன் பனியாற்றும் நீண்ட பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது.
ஆதாரமற்ற தகவல்களை நம்பவேண்டாம் என்று எனது திரையுலக நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் தொடர்ந்து இணைந்து வேலை செய்து நமது படங்களை சர்வதேச தளங்களுக்கு எடுத்துச் செல்வோம் . அதற்கான முயற்சிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டோம். இதில் நாம் அனைவரும் நிச்சயம் ஒன்றாய் பயணிப்போம்” என்று நாசர் இந்தக் குழப்பத்திற்கு தெளிவான விளக்கமளித்துள்ளார்.