இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துவரும் விக்ரம படக்குழுவில் தற்போது நடிகர் ’சித்திரம் பேசுதடி’ நரேன் இணைந்துள்ளார். இதுகுறித்து நடிகர் நரேன் ட்வீட் செய்துள்ளார், நடிகர் நரேனை வரவேற்று நடிகர் கமல்ஹாசனும் ட்வீட் செய்துள்ளார். 


இதுகுறித்த நடிகர் நரேனின் ட்வீட்டில் ’யாரால் நடிக்க வேண்டும் என ஒரு சிறுவன் ஆசைப்பட்டானோ அதே நடிகருடன் சினிமாவில் நடிக்கும் கனவு அந்தச் சிறுவனுக்குத் தற்போது நிறைவேறியுள்ளது’ என ட்வீட் செய்துள்ளார். 






நரேனை வரவேற்று கமல் செய்திருக்கும் ட்வீட்டில், ‘நீண்டகாலமாக நிறைவேறாதது தற்போது நிறைவேறியுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.





படக்குழுவில் அண்மையில் பிக்பாஸ் புகழ் ஷிவானி இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  


மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’ . இந்த படத்தில் கதாநாயகனாக உலக நாயகன் கமல் நடிக்க , வில்லன்களாக களமிறங்க உள்ளனர் விஜய் சேதுபதி , பகத் பாசில், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். சமீபத்தில் விக்ரம் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தை கலக்கினர். கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட் வரையிலும் ஃபர்ஸ்ட்லுக் குறித்து வெகுவாக பேசப்பட்டது. இந்த படத்தின்   ஷூட்டிங் கடந்த சனிக்கிழமை காரைக்குடி பகுதியில் தொடங்கியது. அதில் கமல் மற்றும் ஃபகத் பாசிலுக்கு இடையிலான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அப்போது கமலுடன் ஃபகத் ஃபாசில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலானது. படத்தில் முக்கிய நடிகர்கள் குறித்த விவரங்கள் மட்டுமே வெளியான சூழலில் நடிகைகள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை. தற்போது நடிகைகள் தேர்வு நடைப்பெற்று வருவதால், அது முடிந்ததும்  அடுத்த மாதம் மொத்த நடிகர்கள் மற்றும் நடிகைகளின்  பட்டியலையும்  போஸ்டருடன்  வெளியிட  இயக்குநர் திட்டமிட்டுள்ளதாக படக்குழுவிற்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் நடிகை ஷிவானி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை ஷிவானியின் நெருங்கிய நண்பர்கள் உறுதி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஷிவானியின் கதாபாத்திரம் படத்தின் மிக முக்கிய கதாபாத்திரம் என கூறப்படுகிறது. தற்போது காரைக்குடியில் தொடங்கியுள்ள படப்பிடிப்பில் ஷிவானி பங்கேற்க உள்ளார். இவரை தவிர நடிகை ஆண்ட்ரியாவும் படத்தில் ஒப்பந்தமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான முந்தைய படமான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடிக்கும் கமலுக்கு மகனாக , ஜெயராம் மகன் காளிதாஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானதும் குறிப்பிடத்தக்கது.விக்ரம் படத்தை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கவுள்ளார்.கிரிஷ் கங்காதரன் படத்திற்கான ஒளிப்பதிவை செய்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய முந்தைய படமான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் ரசிகர்களுக்காக சில மாறுதல்களை செய்தாராம் லோகேஷ் . ஆனால் விக்ரம் படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜின் திரைப்படமாக இருக்கும் என  விகரம் படத்தின் கதாசிரியருள் ஒருவரான ரத்ன குமார் கூறியிருந்ததும் நினைவுக்கூறத்தக்கது. விக்ரம் படம் தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகர்களான கமல், ஃபாஹத், விஜய் சேதுபதி என பெரிய கூட்டணியில் உருவாகி வருவதால் படம் மீதான எதிர்பார்ப்பும் தற்போது எகிறியுள்ளது. 

Also Read: பிக்பாஸ் ஷிவானிக்கு ஜாக்பாட்.... விக்ரம் படத்தில் இணைந்தார்!