இன்று நடிகர் நெப்போலியனின் பிறந்தநாள். ஒவ்வொரு நடிகரிடமும் எடுத்துக் கொள்வதற்கு சினிமா ரசிகர்களாகிய நமக்கு ஒரு கதை இருக்கும் இல்லையா? அப்படியான ஒரு கதை நடிகர் நெப்போலியனின் வாழ்க்கையிலும் இருந்திருக்கிறது. ஜிகர்தண்டா படத்தில் ராகவா லாரன்ஸ் க்ளின்ட் ஈஸ்ட்வுட் பார்த்து இன்ஸ்பையர் ஆனது போன்ற ஒரு கதைதான் இதுவும்.
1991ஆம் ஆண்டு பாரதிராஜாவின் ’புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். முதலில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த நெப்போலியன், 1993ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் படமான ’சீவலப்பேரி பாண்டி’யில் ஹீரோவாகி, தொடர்ந்து இன்று வரை பல படங்களில் பல வித கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மேலும் கோலிவுட் தாண்டி 'டெவில்ஸ் நைட்’, ’க்ரிஸ்மஸ் கூப்பன்’ போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்து நெப்போலியன் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.
நெப்போலியன் தமிழில் இறுதியாக பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ’சுல்தான்’ படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியான இப்படத்தில் கார்த்திக்கு அப்பாவாக நெப்போலியன் நடித்திருந்தார்.
நெப்போலியனின் சினிமா ஆசை
கமர்ஷியல் ஹீரோவாகவும் வில்லனாகவும், நடித்த நெப்போலியன் தென்காசிப்பட்டினம் போன்ற படங்களில் தன்னுடைய நகைச்சுவையாக பக்கங்களையும், அதே நேரத்தில் போக்கிரி மாதிரியான படங்களில் தன்னுடைய உணர்ச்சிகரமான நடிப்பையும் தனித்து தெரியும் அளவிற்கு வெளிப்படுத்தியிக்கிறார்.
படங்களில் நடிக்க வேண்டும் ஒரு நடிகனாக வேண்டும் என்கிற நெப்போலியனின் ஆசை ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடந்த மேஜிக்கலான தருணங்களில் ஒன்று. ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு படத்தைப் பார்த்து அது தன்னை கவர்ந்த காரணத்திற்காக சினிமாவுக்கு வந்தவர்களில் நெப்போலியனும் ஒருவர். அவர் ஒரு நடிகனாக ஆசைப்பட்டதற்கு முக்கிய காரணம் இயக்குநர் ராம் கோபால் வர்மா என்று நம்ப முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை!
இந்தச் சம்பவம் நடந்தது 1989இல். தெலுங்கு மொழியில் தனது முதல் படமான சிவா படத்தை ராம் கோபால் வர்மா 1989ஆம் ஆண்டு இயக்கினார். கல்லூரி மாணவர்களை தவறான செயல்களுக்கு தூண்டுவதைப் பற்றிய படம் சிவா. தெலுங்கு சினிமாவை பலவகைகளில் மாற்றியமைக்க உதவிய ஒரு படமாக கருதப்படுகிறது சிவா. முதன்முறையாக இந்தப் படத்திற்காக ஒளிப்பதிவிற்காக புதிய தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
மேலும் உடலோடு சேர்த்து பொருத்திக் கொள்ளக் கூடிய கேமராவான ஸ்டெடி கேம் முதல்முறையாக இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டது. சுமாரான வெற்றி ஒன்றை எதிர்பார்த்து இந்தப் படத்தை தயாரித்த நிறுவனத்திற்கு படத்தின் பிரம்மாண்ட வெற்றி கொஞ்சம் ஆச்சரியமளிப்பதாகவே இருந்தது. திரையரங்கத்தில் மொத்தம் 175 நாட்கள் ஓடிய இந்தப் படத்திற்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஆவணப்படம் எடுக்கப்பட்டு வீடியோ வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படி பட்டிதொட்டி எல்லாம் கலக்கிய சிவா படம், தமிழில் உதயம் என்கிற தலைப்பில் டப் செய்து வெளியாகி இங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை பார்த்த நெப்போலியன் இந்தப் படத்தால் கவரப்பட்டு தானும் சினிமாவில் நடிக்க முடிவு செய்தாராம். அன்று அவரது அந்த முடிவு தான் இன்று நெப்போலியன் என்கிற நடிகரின் அடையாளத்திற்கு காரணமாக இருக்கிறது!