தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். உயர்ந்த உருவத்தை பக்கபலமாக கொண்ட அவர் பெரும்பாலான படங்களில் மிரட்டலான முரட்டுத்தனமான வில்லனாக நடித்துள்ளார். சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட படங்கள் அவரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படங்களாக அமைந்தது. திரையில் வில்லனாக முரட்டுத்தனமான ஒரு நடிகராக பரிச்சயமான நெப்போலியன் நிஜ வாழ்க்கையில் மிகவும் நல்ல மனிதர். 


 


பலரும் ஒரு சிறு உதவியை செய்து விட்டு தம்பட்டம் அடித்து கொள்ளும் இந்த உலகத்தில் சத்தமே இல்லாமல் பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார் நெப்போலியன். பலருக்கும் ஒரு முன்மாதிரியாக உத்வேகமாக வாழ்ந்து வருகிறார். சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நெப்போலியன் அரசியலுக்கும் இறங்கி மத்திய அமைச்சராக பொறுப்பேற்று பதவி வகித்தார். பின்னர் நடிப்பு, அரசியல் இரண்டையும் விட்டு விலகி குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அவரின் மகன் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதால்  அவரின் சிகிச்சைக்காக அமெரிக்காவிலேயே செட்டிலாகி பிசினஸ் செய்து வருகிறார். 


 



 


இந்நிலையில் அவரின் இரண்டாவது மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக சென்னை வந்த நெப்போலியன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நிச்சயதார்த்த பத்திரிகையை கொடுத்தார். 


தொடர்ந்து மறைந்த நடிகரும் நண்பருமான கேப்டன் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று அவரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். 


இந்நிலையில் தேசிய விருது வென்ற மாற்றுத்திறனாளி பின்னணி பாடகி ஜோதியின் ஆசையை நிறைவேற்றி உள்ளார் நெப்போலியன். தமிழ்நாட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாடகியான ஜோதி மத்திய அரசு வழங்கும்  National Award of persons with disabilities பிரிவில் தேசிய விருதை பெற்றுள்ளார். இசை பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த 7 ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு போக வேண்டும் என்ற ஜோதியின் கனவை நெப்போலியன் நிறைவேற்றியுள்ளார். ஜோதியுடன் அவர் வீடியோ காலில் பேசும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோ காலில் பேசிய அந்த பாடகி 'உங்க வீட்ல எல்லாரும் எங்களை நல்ல பாத்துக்குறாங்க. எங்க மேல காட்டுற அன்புக்கு நன்றி. தனுஷ் அண்ணா எப்படி இருக்காங்க. எங்களுக்கு செப்டம்பர் 11ம் தேதி நார்த் கரோலினாவில் இருந்து பிளைட் அங்கிள் என்கிறார். அதற்கு நெப்போலியன் நான் இப்போது சென்னையில் இருக்கிறேன். இந்த மாத இறுதியில் அமெரிக்கா வந்து விடுவேன். நான் வந்ததும் உங்களை வந்து சந்திக்கிறேன். நீ நல்லா பெர்பார்ம் பண்ணியா? என விசாரிக்கிறார்.  அவரின் வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காக உள்ளது.