நானி


கோலிவுட்டில் வெப்பம்  படத்தில் கதாநாயகனாக அறிமுகமான நானி, தென் இந்திய சினிமாவில் தனித்து நிற்கும் நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை தனது முக்கிய நோக்கமாக வைத்திருக்கும் அவர், ராஜமெளலி இயக்கிய நான் ஈ படத்தின் மூலம் பலரால் கவனிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜெண்டில்மேன், ஜெர்ஸி, ஷியாம் சிங்கா ராய் உள்ளிட்ட படங்களின் மூலம் தனிவழியில் பயணித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஹாய் நன்னா 


ஹாய் நன்னா


நானி , மிருணாள் தாக்கூர் நடித்துள்ள 'ஹாய் நன்னா' திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. ஷோர்யுவ் இப்படத்தை இயக்கியுள்ளார். நாசர, ஜெயராம், ஷ்ருதி ஹாசன், குழந்தை நட்சத்திரம் கியாரா கன்னா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வைரா என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது ஹாய் நன்னா.


தந்தை மகள் கதையின் மூலம் உறவுகள், காதல், குழந்தைகளை வளர்ப்பது என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்கிறது ஹாய் நன்னா திரைப்படம். சீதா ராமம் படத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த மிருணாள் தாக்கூர் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து ரசிகர்களை மீண்டும் கலங்கடித்துள்ளார். ஹாய் நன்னா படத்திற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், தற்போது நடிகர் நானியின் மனைவி அஞ்சனா ஏலவர்தி தனது கணவர் நானியைப் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.


அக்மார்க் அப்பா


ரீல் உலகத்தில் மட்டும் இல்லாமல் ரியல் உலகத்திலும் ஆறு வயது மகனுக்கு தந்தையாக இருக்கும் நானி, தன்னுடைய குடும்பத்துடன் இன்று ஹாய் நன்னா படத்தை பார்த்துள்ளார். திரையரங்களில் தன்னுடைய தந்தை நானியைக் கட்டிபிடித்தபடி உட்கார்ந்திருக்கும் அவரது மகனின் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அஞ்சனா “ ஹாய் நன்னா படம் ஆன்மாவை அரவணைக்கும் ஒரு அனுபவமாக இருந்தது. நானி திரையில் நீங்கள் ஒரு அக்மார்க் அப்பா” என்று அவரை பாராட்டியுள்ளார். அஞ்சனாவின் இந்தப் பதிவு பலரால் பகிரப்பட்டு வருகிறது.