அனிமல்


ரன்பீர் கபூர் , சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியானது அனிமல் திரைப்படம். அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இப்படத்தை இயக்கியுள்ளார். அனில் கபூர், பாபி தியோல், ட்ரிப்தி டிம்ரி உள்ளிட்டவர்கள் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். 


அனிமல் திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் ரூ.425 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ரன்பீர் கபூர் நடிப்பில் கேங்ஸ்டர் டிராமாவாக உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மற்றொரு தரப்பு ரசிகர்கள் இப்படத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.


அனிமல் படத்தில் பெண் வெறுப்பை ஊக்குவிக்கும் பல்வேறு விதமான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக இப்படத்தின் மேல் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. முன்னதாக இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஜெயதேவ் உனட்கட் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அனிமல் படத்தைப் புகழ்ந்து நடிகை த்ரிஷா பதிவிட்டதாக அவரது ஸ்டோரி ஸ்க்ரீன்ஷாட்கள் இணையதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன . இதனைத் தொடர்ந்து அந்தப் பதிவை அவர் நீக்கினார்.


அனிமல் படத்தை புகழ்ந்து தள்ளிய ராம் கோபால் வர்மா


அதே நேரத்தில் அனிமல் படத்திற்கும் படத்தின் இயக்குநர் சந்தீப் வாங்காவுக்கும் மிகப்பெரிய ரசிகராக மாறியுள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்  படத்தைப் புகழந்து நீண்ட விமர்சனம் ஒன்றை வெளியிட்டிருந்த ராம் கோபால் வர்மா தொடர்ச்சியாக பலவிதங்களில் படத்தை ஆராய்ந்து தன் கருத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் ரன்பீர் கபூர் மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரின் காலணிகளுக்கு தான் முத்தம் கொடுக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.


ஆதரவு தெரிவித்த அனுராக் கஷ்யப்


இந்நிலையில், ராம் கோபால் வர்மாவைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் அனுராக் கஷ்யப் அனிமல் படத்திற்காக ஆதரவு குரல் கொடுத்துள்ளார். தான் இன்னும் அனிமல் படத்தைப் பார்க்கவில்லை என்றும், ஆனால் சமூக வலைதளங்களில் நடந்துவரும் விவாதங்களை வைத்து இது எதைப் பற்றிய பிரச்சனை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


“ஒரு படைப்பாளியை இந்த மாதிரி படம் எடுக்க வேண்டும், இந்த மாதிரி எடுக்க கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் இல்லை. மேலும் இந்த நாட்டில் மக்கள் அனைவரும் எளிதில் புண்படக்கூடியவர்கள். என்னுடைய படங்களைப் பார்த்து அவர்கள் புண்படுகிறார்கள். ஆனால் படித்தவர்கள் இப்படி படங்களைப் பார்த்து புண்படத் தேவையில்லை என்பதே என் ஆசை” என்று அனுராக் கஷ்யப் தெரிவித்துள்ளார்




மேலும் படிக்க : Jaydev Unadkat: ‘மோசமான படம்.. என்னோட 3 மணி நேரம் வேஸ்ட்’ - அனிமல் படத்தை விளாசிய கிரிக்கெட் வீரர் ஜெயதேவ் உனட்கட்


Ram Gopal Varma: ரன்பீர் செருப்பு வரை இறங்கிய ராம் கோபால் வர்மா.. அனிமல் படத்துக்கு புகழாரம்!