தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நானி. இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் உண்டு. இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஷியாம் சிங்கா ராய் கடந்த 24-ந் தேதி வெளியானது. இந்த படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், இணையதளம் ஒன்றிற்கு நடிகர் நானி சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அப்போது, அவரிடம் ஆந்திராவில் சமீபத்தில் ஏராளமான திரையரங்குகள் டிக்கெட் விலை குறைப்பை கண்டித்து இதுவரை சுமார் 300 திரையரங்குகள் மூடப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, “வக்கீல் சாப் படத்தின் வெளியிட்டின்போது முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்திருந்தால் இன்று இந்தளவு பிரச்சினை வந்திருக்காது. நான் எந்த அரசுக்கும் எதிரானவன் கிடையாது. ஆனால், எதிர்பாராதவிதமாக தெலுங்கு திரையுலகில் ஒற்றுமை இல்லை.” என்றும் கூறியுள்ளார்.
சிரஞ்சீவி, பவன்கல்யாண், பாலகிருஷ்ணா, நாகர்ஜூனா என்று மூத்த நடிகர்களும், அவர்களது வாரிசுகளான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜூன் என்று பலரும் தெலுங்கு திரையுலகில் கோலோச்சி வரும் நிலையில், நானி தெலுங்கு திரையுலகில் நடிகர்கள் மத்தியில் ஒற்றுமையில்லை என்று நானி கூறியிருப்பது டோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. நானியின் கருத்துக்கு பலரும் சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, ஆந்திராவின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திரையரங்குகளுக்கான டிக்கெட் விலையை குறைத்து உத்தரவிட்டார். அவர் பிறப்பித்த உத்தரவில், கிராமப்புறங்களில் ரூபாய் 5, 10, 20, 40 எனவும், நகர்ப்புறங்களில் திரையரங்குகளில் ரூபாய் 20, 40, 60 எனவும், ஏ,சி. திரையரங்குகளில் ரூபாய் 40, 60, 100 எனவும், மாநகராட்சிகளில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூபாய் 75, 50 மற்றும் 250 ஆகவும் டிக்கெட் விலையை நிர்ணயித்து உத்தரவிட்டிருந்தார்.
ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த உத்தரவுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், திரைத்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்