பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கிழுமத்தூர் கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மகன் பால்ராசு(30). இவரது மனைவி பூவழகி (22). இவர், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 10ம் தேதி அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி பால்ராசுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது எனது பெற்றோர் பால்ராசுவுக்கு 3 பவுன் செயின், 2 1/2  பவுன் மோதிரம் மற்றும் வீட்டிற்கு தேவையான சீர் வரிசை கொடுத்தனர். மேலும் 10 பவுன் நகையும், பைக் வாங்குவதற்காக ஒரு லட்சமும் தருவதாக  பெற்றோர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திருமணமானதில் இருந்தே எனது கணவர் செல்போனில் பல பெண்களுடன் செல்பி எடுத்த போட்டோவை காட்டினார். அவர்கள் யார் என்று கேட்டபோது உன்னை திருமணம் செய்வதற்கு முன்பே நகை பணத்துக்காக பல பெண்களுடன் என் பெயரை மாற்றிச்சொல்லி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறேன் என்றார்.




மேலும் இதையெல்லாம் நீ கண்டு கொள்ளாதே. உன்னை நல்ல முறையில் பார்த்து கொள்கிறேன் எனக்கூறினார். திருமணம் முடிந்து 2மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தினோம். திடீரென என்னை என் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, உங்கள் மகளுடன் நான் குடும்பம் நடத்த  ரூ.3 லட்சம், 10 பவுன் நகையும் தயார் செய்து விட்டு கூப்பிடுங்கள். அழைத்து செல்கிறேன் என கூறிவிட்டு சென்றார். ஆனால் அவரது செல்போன் எண்களுக்கு போன் செய்தால் நான் சென்னையில் வேலை பார்க்கிறேன் பணத்தையும், நகையையும் தயார் செய்தால் உன்னை வந்து அழைத்துச் செல்கிறேன் எனக்கூறி வந்தார். இந்நிலையில் ஒருநாள் காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இருந்து எனது கணவரை தேடி எங்கள் வீட்டிற்கு காவல்துறையினர் வந்த போது என்ன நடந்தது ஏன் என் கணவனை தேடி வந்துள்ளீர்கள் என்று கேட்டபோது. காவல்துறையினர் கூறியது உனது கணவர் ஒரு மைனர் பெண்ணுடன் திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக வாழ்ந்துள்ளார்.  எனவே அவரை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து சென்றனர்.




இதனை தொடர்ந்து சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் போனில் என்னிடம், பால்ராசுவுடன் திருமணமாகி 8 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்தார். நகை பணத்திற்காக திருமணம் செய்து பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடி பல மோசடிகளை செய்ததோடு, எனது வாழ்க்கையையும் சீரழித்து விட்டார் என பூவழகி  பால்ராசு மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து பால்ராசுவை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார், சென்னை சென்று பால்ராசுவை நேற்று கைது செய்து பெரம்பலூர் அழைத்து வந்தனர். அவர் எத்தனை பெண்களை மோசடி செய்துள்ளார் என தொடர்ந்து காவல்துறையினர் விசாரனையை மேற்கொண்டு வருகிறார்கள்.