நடிகர் ராஜ்கிரண் மகளை பிரபல சீரியல் நடிகர் காதல் திருமணம் செய்துள்ள சம்பவம் திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. 


சன் டிவியில் ஒளிபரப்பான இயக்குநர் திருமுருகன் இயக்கிய  நாதஸ்வரம் சீரியலில் சம்பந்தம் என்கிற கேரக்டரில் நடித்தன் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் முனீஸ்ராஜா. இவர் பிரபல நடிகர் சண்முகராஜனின் உடன் பிறந்த தம்பியாவார். அந்த சீரியலில் முனீஸ்ராஜாவின் நடிப்பும்,ஸ்டைலான நடையும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அந்த சீரியல் மூலம் பிரபலமான அவர், ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற தொடரில் ஹீரோவாக நடித்தார்.


இதற்கிடையில் சீரியலைத் தொடர்ந்து தேவராட்டம் உள்ளிட்ட  சில திரைப்படங்களிலும் முனீஸ்ராஜா நடித்தார். மேலும் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பழனி தொகுதியில் சுயேச்சை உறுப்பினராகப் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தார். இதனையடுத்து பிரபல நடிகர் ராஜ்கிரணின் மகள் ஜீனத் பிரியாவுக்கும் இவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. 


இந்த விஷயம் வீட்டுக்கு தெரிந்ததும்  ஆரம்பத்தில் இரண்டு பேர் வீட்டிலும்  சில விஷயங்களை காரணம் காட்டி இந்தக் காதலை ஏற்கவில்லை என சொல்லப்படுகிறது. அதேசமயம் தொடர்ந்து இரு தரப்பிலும் சிலர் சமரசப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் முடிவில் நடிகர் முனீஸ்ராஜாவின் வீட்டில் இவர்களின் காதலை ஏற்றுக் கொண்டு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதேநேரம் பெண் வீட்டில் தனது மகளின் முடிவுக்கு ராஜ்கிரண் சம்மதம் சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.


மேலும் ராஜ்கிரணின் மனைவி மட்டும் இன்னும் சமாதானமாகாததால் முனீஸ் ராஜா - ஜீனத் இருவரும் பதிவு திருமணம் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு முனீஸ் ராஜா அளித்துள்ள பேட்டியில், முதன் முதலில் ஃபேஸ்புக் மூலமாகத் தான் ஜீனத்தை பார்த்ததாகவும், பார்த்தவுடன் பிடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அதன்பிறகு இருவரும் காதலித்து வந்தோம். இந்த விஷயம் அடுத்த கட்டத்துக்கு நகரும் போது தான் பிரச்சனை மேல பிரச்சனை வெடித்தது. 


திரையில எல்லாரையும் நான் சிரிக்க வைக்கிறவன். ஆனால் ஜாதி, மதம்  என பல விஷயங்கள் எங்களுடைய மகிழ்ச்சியான வாழ்க்கைக்குக் குறுக்க நிக்குது. இதெல்லாம் யோசிச்சுப் பார்க்கும் போது சிரிக்கறதா அழறதான்னு எனக்கு தெரியலை. அதேபோல் இதுபோன்ற ஒரு நல்ல விஷயம் நடக்கும் போது  யார் மனதும் புண்படாமல் இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். அதனால் அதற்கு தீவிரமாக முயற்சி பண்ணி கொண்டிருக்கிறேன். எப்படியாவது இன்னும் கொஞ்ச நாட்கள்ல எல்லாம் நல்லபடியா சுமூகமா முடிஞ்சி நல்லதா ஒரு செய்தியை சொல்கிறேன் என தெரிவித்துள்ளார். 


Also Read: Baakiyalakshmi Serial: மீண்டும் வீட்டுக்கு வரும் கோபி..மிரண்டு போன பாக்யா...இன்றைய எபிசோடில் என்ன நடந்தது?