தியேட்டர் உள்ளேயே உட்கார்ந்து கொண்டு படம் மொக்கையாக இருக்கு, தயவு செய்து வராதீங்க என சொல்லாதீர்கள் என நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


சாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லாந்தர்' திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், தயாரிப்பாளர் - நடிகர் பி.எல். தேனப்பன் என பலரும் பங்கேற்றனர். 


இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், “நான் முதலில் இப்படத்தின் இயக்குநருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். 23 நாட்களில் ஷூட்டிங்கை முடித்து விட்டார். தயாரிப்பாளர் அளவுக்கு நானும் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நான் நேரிடையாக பார்த்திருக்கிறேன். இப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். திறமைகள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அது எப்போது வேண்டுமானாலும் வெளிப்படலாம். நான் பொதுமக்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். ஒரு படம் உங்களுக்கு பிடிக்கிறது என்றால் அதை 4 பேரிடம் சொல்லுங்கள்.பிடிக்கவில்லை என்றால் அதை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். படத்துக்கு போகிறவர்களை அந்த படம் நல்லா இல்ல போகாதீங்க என கூறாதீர்கள். ஒரு படம் எடுக்க எவ்வளவு பேர் உழைக்கிறார்கள், கஷ்டப்படுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். படப்பிடிப்பில் விபத்துகள் ஏற்பட்டு எவ்வளவு பேர் இறந்து கூட போயிருக்கிறார்கள். 


இப்படிப்பட்ட நிலையில் தியேட்டர் உள்ளேயே உட்கார்ந்து கொண்டு படம் மொக்கையாக இருக்கு, தயவு செய்து வராதீங்க என சொல்லாதீர்கள். எல்லாரும் படம் பார்க்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் ரூ.120ல் மாளிகை கட்டிவிட போவதில்லை. ஆனால் படங்களை வந்து பார்ப்பதால் பல குடும்பங்கள் வாழும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நான் பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன். ஆனால் அதிகமாக சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்கிறேன். சிங்கத்துக்கு வாலாக இருப்பதை விட ஈக்கு தலையாக இருக்கவே விரும்புகிறேன். 8 தோட்டாக்கள் படம் கதையை சொன்னார்கள். புதுமுக இயக்குநர் தான் நடித்தேன். அப்படி நிறைய பேருடன் இணைந்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.