மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் (Mohanlal) 1980ஆம் ஆண்டு வெளியான 'மஞில் விரிஞ்ச பூக்கள்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அன்று தொடங்கிய இந்தத் திரை பயணத்தை கடந்த 44 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக நகர்த்தி தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்து வருகிறார். இந்த மாலிவுட் கிங் நேற்று தனது 64ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். 


 



 


மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஏராளமான வெற்றிப்படங்களில் நாயகனாக பாக்ஸ் ஆபீஸ் வசூல் மன்னனாக விளங்கும் மோகன்லால் தமிழ் சினிமாவிலும் இருவர், உன்னை போல் ஒருவன், ஜில்லா, காப்பான், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.


அதைத் தொடர்ந்து தற்போது நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் 'எம்புரான்' படத்தில் நடித்து வருகிறார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பர்த்டே ஸ்பெஷலாக 'எம்புரான்' படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் மோகன்லாலின் நிகர சொத்து மதிப்பு குறித்த விவரங்களைப் பார்க்கலாம். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரின் சம்பளமும் ரூ.100 கோடிகளை நெருங்கும் நிலையில் நடிகர் மோகன்லால் தான் நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக ரூ.20 கோடி வரை வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. அதைத் தவிர பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ, விளம்பரங்கள் மற்றும் பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். நடிப்பைத் தாண்டி மோகன்லால் விஸ்மயாஸ் மேக்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு ஸ்டுடியோ நடத்தி வருகிறார். கேரளாவில் பல திரையரங்கங்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.


 



பிக்பாஸ் ஷோ நடத்த ரூ.18 கோடி சம்பளமாகப் பெறுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓடிடி தளங்கள், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உணவு உள்ளிட்ட பல நிறுவனங்களின் பிராண்ட் அம்பாஸடராக இருந்து வருகிறார். இது தவிர கல்வித் துறைகளிலும் முதலீடு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது. 


டொயோட்டா இன்னோவா, W221 பென்ஸ், எஸ் கிளாஸ், பென்ஸ் GL350 , டொயோட்டா வெல்ஃபயர், ஓஜஸ் கோச் கேரவன் உள்ளிட்ட பல ஆடம்பரக் கார்களை வைத்துள்ளார் மோகன்லால். கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் சொகுசு பங்களாக்கள், கொச்சியில் 50 ஏக்கர் மதிப்பிலான நிலப்பரப்பும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 


இப்படி பல வகையிலும் வருமானத்தை ஈட்டும் நடிகர் மோகன்லால் நிகர சொத்து மதிப்பு ரூ. 375 முதல் 400 கோடிகள் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. தற்போது அவர் நடித்து வரும் 'எம்புரான்' திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.