தமிழ் சினிமாவின் ஒவ்வொரு காலகட்டங்களிலும் சிறப்பான ஆளுமை கொண்ட நடிகர்கள் இருந்து வந்துள்ளனர். எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் என அந்தந்த கலகட்டங்களுக்கேற்ப ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படி ஒரு சிலர் உச்சத்தில் இருந்தாலும் அதே சமயத்தில் தங்களது தனித்துவமான நடிப்பு திறமையால் மக்களின் கவனத்தை ஈர்த்த கார்த்திக், விஜயகாந்த், சத்யராஜ், முரளி, பிரபு போன்றவர்களில் மிகவும் முக்கியமாக கொடி கட்டி பறந்த ஒரு நடிகர் தான் மைக் மோகன்.  


மோகனின் அறிமுகம் :


நடிகர் மோகன் முதலில் அறிமுகமானது ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா இயக்குநராக அறிமுகமான 'கோகிலா' என்ற கன்னட திரைப்படத்தில். அவரை அறிமுகப்படுத்தியவரையே தனது குருவாக ஏற்றுக்கொண்டார் மோகன். தமிழிலும் மோகனை அறிமுகப்படுத்தியது பாலுமகேந்திரா தான். 'நெஞ்சத்தை கிள்ளாதே' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அடுத்தடுத்து கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை என அந்த கால காதல் காவியங்களில் அவரின் நடிப்பு பாராட்டை பெற்றது. 


 



ஆல்ரவுண்டர் மோகன் :


நடிகர் கமல்ஹாசனுக்கு எந்த அளவிற்கு ரசிகைகள் மத்தியில் கிரேஸ் உள்ளதோ அதே அளவிற்கு மோகனுக்கும் ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தனர். மென்மையான கதாபாத்திரங்களில் நடிக்க மிகவும் பொருத்தமானவர் மோகன். மௌன ராகம், உதயகீதம், இதயக்கோயில், மெல்ல திறந்தது கதவு என பட்டியல் நீண்டு கொண்டே போகும். அதற்காக அவர் அமைதியாக சாதுவாக நடிக்க மட்டுமே சரிப்பட்டு வருவார் என முத்திரை பதித்து விட முடியாது. வில்லனாக 'நூறாவது நாள்', நகைச்சுவையாக 'ரெட்டைவால் குருவி' என தன்னால் எந்த மாதிரியான கதாபாத்திரத்திலும் பூந்து விளையாட முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர். 


வெள்ளிவிழா கண்ட படங்கள் :


ரஜினி, கமல் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான அதே நாளில் மோகன் திரைப்படங்களும் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்த காலங்களும் உண்டு. 100 நாட்கள் முதல் 300 நாட்கள் வரை ஓடி வெள்ளிவிழா கண்ட படங்கள் ஏராளம். நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், அரசன், மௌன ராகம், உதயகீதம், நான் பாடும் பாடல், நூறாவது நாள், பிள்ளை நிலா, இதயக்கோயில் என பட்டியல் நீளும். 


மோகனின் வெற்றிக்கு காரணம் :


மோகன் நடித்த பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. அதனால் அனைத்து பாடல்களும் ஹிட் தான். அதற்காக அவரின் இசை தான் படத்தின் வெற்றிக்கு காரணம் என்பதை விட அதுவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். அழுத்தமான திரைக்கதை, உணர்ச்சிபூர்வமான நடிப்பு, தத்ரூபமான காட்சி அமைப்பு, உயிருள்ள இசை என அனைத்தும் ஒன்று சேர்ந்தது தான் மோகனின் வெற்றி. 


 



எவர்க்ரீன் காம்போ  :


இளையராஜாவின் இசையும், எஸ்.பி.பியின் பின்னணி குரலும் அதற்கு மோகனின் முகபாவனைகளும் தான் அவரின் பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் விருப்பமான பாடல்களாக இருக்க முக்கியமான காரணம். ராஜ ராஜ சோழன், நிலாவே வா, மன்றம் வந்த, இளைய நிலா, தோகை இளமயில், மலையோரம் வீசும் காற்று, ஊரு சனம், நான் பாடும் மௌன ராகம், சங்கீத மேகம், தேனே தென்பாண்டி, உதயகீதம், நிலவு தூங்கும் நேரம் இப்படி, ஈரமான ரோஜாவே என நாள் முழுக்க கேட்கும் அளவிற்கு எண்ணற்ற ஹிட்ஸ் இசையை விரும்பும் அனைவரின் பிளே லிஸ்ட்களிலும் நிச்சயம் இடம்பெறும்.   


இப்படி தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழி படங்களில் கொடி கட்டி பறந்த நடிகர் மோகன் திரை பயணம் மேலும் தொடரட்டும்.