80'ஸ்களில் முன்னணியில் இருந்த பல நடிகர்களில் வெற்றிவிழா நாயகன் என கொண்டாடப்பட்டவர் நடிகர் மோகன். இவரை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்றால் இவர் மைக் மோகன் என பிரபலமாக அழைக்கப்பட்டவர். அவர் நடித்த முக்கால்வாசி படங்களில் கையில் மைக்கை பிடித்து கொண்டே வெற்றிப்படிகளில் ஏறி முன்னணியில் வந்தவர். மைக் மோகனின் பாடல்கள் இன்றும் மிகவும் பிரபலமான இனிமையான பாடல்கள். ரஜினி மற்றும் கமலுக்கு மட்டும் அல்ல மோகனுக்கும் ஏராளமான பாடல்களுக்கு மெட்டமைத்து இருக்கிறார் இசைஞானி இளையராஜா. 


கடைசியாக தமிழில் பிரவேசம் :


நடிகர் மோகன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது அவரின் வடிவமான முகமும் அழகான புன்சிரிப்பும் தான். பாலுமஹேந்திராவின் முதல் கன்னட திரைப்படமான "கோகிலா" மூலம் அறிமுகமானவர் நடிகர் மோகன். இப்படி கன்னடத்தில் தொடங்கிய அவரின் பயணம் தெலுங்கு, மலையாளம் படங்களில் பயணித்து பிறகு கடைசியாக தான் 1980ல் வெளியான "மூடுபனி" திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடி எடுத்து வைத்தார். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது. 


 



 


மோசமான தோல்வி:


தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்த மோகன் 1999ல் தனது சொந்த தயாரிப்பில் அவரே திரைக்கதை எழுதி இயக்கி, நடித்த திரைப்படம் தான் "அன்புள்ள காதலுக்கு". செப்டம்பர் மாதம் 17ம் தேதி வெளியான இந்த திரைப்படம் இன்றோடு 23 ஆண்டுகள் நிறைவு செய்கிறது. இப்படத்தில் மேகா, சங்கீதா, டெல்லி கணேஷ், ஆனந்த் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த அளவிற்கு ஓர் மோசமான ஃபிளாப் படத்தை தமிழ் சினிமா கண்டு இருக்காது. அந்த அளவிற்கு படு மோசமான விமர்சனத்தை பெற்று வணீக ரீதியாகவும் தோல்வி அடைந்தது. இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார் தேனிசை தென்றல் தேவா. பாடல்களும் சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை.  இப்படத்தின் திரைக்கதை அதே ஆண்டு வெளியான மின்சாரக்கண்ணா, ஜோடி, பூவெல்லாம் கேட்டுப்பார் போன்ற திரைப்படங்களில் சாயலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


உரு தெரியாமல் ஆக்கிய உருவம் :


1990 வரையில் நன்றாக ஓடிய மோகனின் திரைப்பயணம் 1991ம் ஆண்டு வெளியான "உருவம்" திரைப்படம் மூலம் ஆட்டம் கண்டது. இந்த படத்திற்காக நடிகர் மோகன் தனது அழகிய முகத்தை மிகவும் கோரமாக மேக் அப் போட்டு நடித்திருந்தார். இதுவரையில் எது அவரின் ரசிகர்களை ஈர்த்ததோ அது அந்த படத்தில் மிஸ்ஸிங் என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அந்த படம் அவரது இத்தனை ஆண்டுகளில் பெற்ற வெற்றியை துவம்சம் செய்தது எனலாம். 


ரீ என்ட்ரி  படமும் ஃபிளாப் :


"உருவம்" திரைப்படத்திற்கு பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து வெளியான "அன்புள்ள காதலுக்கு" திரைப்படமும் மிக பெரிய தோல்வியை சந்தித்ததால் மிகவும் நொந்து போன மோகன் ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு "சுட்டபழம்" என்ற படத்தில் நடித்தார் ஆனால் அதுவும் பெரியளவில் நிற்கவில்லை. வெற்றிவிழா நாயகனாக வலம் வந்த 80'ஸ் ஹீரோ இன்று அடையாளம் தெரியும் அளவிற்கு நினைவில் இல்லை.