10 Years of Thillu Mullu: தலைப்பை பார்த்தவுடன் என்னவோ ஏதோ என்று பதறி விட வேண்டாம். ரீமேக் என்ற பெயரில் எடுக்கப்படும் திரைப்படங்கள் அதன் ஒரிஜினல் படத்தின் பெயரையும் சேர்த்துக் கெடுத்தால் நிச்சயம் யாருடைய ரசிகர்கள் என்றாலும் கோபம் வரத்தான் செய்யும். அந்த வகையில் 2005 ஆம் காலகட்டத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீமேக் படங்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது.
புது ‘தில்லு முல்லு’
குறிப்பாக ரஜினியின் படங்களை ரீமேக் செய்வது தொடர்கதையானது.அதில் ஒன்று 1981 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி மாறுபட்ட வித்தியாசமான காமெடி ரோலில் நடித்து தமிழ் சினிமாவின் எவர்கிரீன் மூவியாக இருக்கும் தில்லு முல்லு படம். இந்த படம் 2013 ஆம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது. பத்ரி வெங்கடேஷ் இயக்கிய இப்படத்தில் ரஜினி கேரக்டரில் மிர்ச்சி சிவா, மாதவி கேரக்டரில் இஷா தல்வார், சௌகார் ஜானகி கேரக்டரில் கோவை சரளா, தேங்காய் சீனிவாசன் கேரக்டரில் பிரகாஷ் ராஜ், மனோபாலா, சந்தானம்,சத்யன், சூரி, இளவரசு, மோனிஷா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தனர்.
மாற்றங்கள் கண்ட படம்
பழைய தில்லு முல்லு படத்தின் கதையை மட்டும் எடுத்துக்கொண்டு நிகழ்காலத்திற்கு ஏற்றமாறு அதில் பல மாற்றங்களை பத்ரி செய்திருந்தார். அதாவது ரஜினி இந்திரன் என்ற பெயரில் பொய் சொல்லி ஆபீஸில் தேங்காய் சீனிவாசனிடம் வேலை வாங்கி இருப்பார். அதேசமயம் சந்திரன் என்ற பெயரில் மாதவிக்கு பாட்டு வாத்தியாராக இருப்பார். புதிய தில்லு முல்லு படத்தில் தம்பி கராத்தே மாஸ்டராக நடித்திருப்பார்.
இதே போல் பழைய படத்தில் ரஜினி புட்பால் மேட்ச் பார்க்க சென்று தேங்காய் சீனிவாசனிடம் மாட்டிக் கொள்வார். இந்தப் படத்தில் ஐபிஎல் போட்டி பார்க்க சென்று மிர்ச்சி சிவா பிரகாஷ்ராஜியிடம் சிக்கிக் கொள்வார். இப்படி ஏகப்பட்ட மாற்றங்களை படத்தில் செய்து இருந்து ரசிகர்களை ஓரளவு திருப்திப்படுத்தியிருந்தார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சந்தானம் நடித்திருந்தார். அந்த காட்சி மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. பழைய தில்லு முல்லு படத்தில் இந்தக் காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தோன்றியிருப்பார்.
அதேபோல் பழைய படத்தில் இருந்து தில்லுமுல்லு தில்லுமுல்லு, ராகங்கள் பதினாறு ஆகிய இரு பாடல்களையும் ரீமேக் செய்திருந்தார்கள். இதில் டைட்டில் கார்டில் வரும் தில்லுமுல்லு தில்லுமுல்லு பாடலில் எம்.எஸ்.விஸ்வநாதனும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து ஆடி இருந்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக அமைந்தது. பழைய படங்களை ரீமேக் செய்வது பிரச்சனை இல்லை. ஆனால் ரீமேக் செய்யப்படும் படங்களின் தரம் பழைய படங்களின் பெயரையும் சேர்த்து கெடுத்து விடக்கூடாது என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.