K.N. Nehru: அமலாக்கத்துறையினரால் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்படவே, அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில்  அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


இந்நிலையில், அவரின் உடல் நலம் குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் கே.என். நேரு அவரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் மயக்க நிலையில் தான் இருக்கிறார். அவரால், சரியாக பேச முடியவில்லை. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் உடன் இருக்கிறார்” என கூறினார். 


முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி அந்த துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பலரும் வழக்கு தொடர்ந்தனர். சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நேற்று காலை முதல் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அறை உள்ளிட்ட தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடந்தனர். இதேபோல் செந்தில்பாலாஜியின் கரூர் வீடு உள்ளிட்ட 8 இடங்களிலும் சோதனையானது நடந்தது. 


சுமார் 17 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. தலைமைச்செயலகத்தில் நடந்த சோதனையின் போது 3 பைகளில் ஆவணங்கள் எடுத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அதிகாலை 2 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். செந்தில் பாலாஜி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்ற குழப்பம் நிலவிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. 


இதற்கிடையில் அதிகாரிகள் அழைத்து செல்லும்போது செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் ஓமந்துராரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு துணை ராணுவத்தினரும், போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ரகுபதி,எ.வ.வேலு,  திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் நேரடியாக மருத்துவமனைக்கு வருகை தந்தனர். 


இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. முன்னதாக அமலாக்கத்துறை சோதனைக்கு மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சியின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.