Actor Meesai Mohan: சிட்டிசன், முண்டாசுப்பட்டி, சீமராஜா உள்ளிட்ட படங்களில் நடித்த மீசை மோகன் உடல்நலக் குறைவால் காலமானார். 

 

மீசைமோகன்:


மதுரையை சேர்ந்த இவர் அரசு வேலைகளில் பணியாற்றி வந்தார். அதை தவிர சென்னையில் இருந்து மதுரை மற்றும் தேனிக்கு படப்பிடிப்புக்காக வரும் சினிமாக்காரர்களுக்கு சரியான இடம் பார்த்து தரும் வேலைகளிலும் மீசை மோகன் பார்த்து வந்துள்ளார். அதனாலேயே சினிமாவுக்கு நெருக்கமாக மீசை மோகன் இருந்துள்ளார். 

 

இப்படி லோகேஷன் பார்த்து தந்து வந்ததால் மீசை மோகனிற்கு, திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர்  சங்கிலி முருகனின் நட்பு ஏற்பட்டது. அதனால், மீசை மோகனிற்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அஜித் நடித்த சிட்டிசன், அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களில் சிறு கேரக்டர்களில் நடித்த இவர், கும்பக்கரை தங்கய்யா, முண்டாசுப்பட்டி, சீமராஜா, வீரன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 

சீரியலிலும் வாய்ப்பு:


கிராமத்து கதைகள் கொண்ட திரைப்படங்களில் தனது மீசையால் மிரட்டிய இவருக்கு, சின்னத்திரையிலும் வாய்ப்பு கிடைத்தது. சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல் இயக்குநர் அழகர், மீசை மோகனை சின்னத்திரைக்கு அழைத்தார். அதனால் மதுர, சரவணன் மீனாட்சி, ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் மீசை மோகன் நடித்துள்ளார். 

 

இந்த நிலையில் சென்னை வடபழனியில் தங்கியிருந்த மீசை மோகனிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிசை பெற்று வந்த மீசை மோகன் இன்று மரணமடைந்தார். மறைந்த நடிகர் மீசை மோகனிற்கு நடிகர் காளி வெங்கட் அஞ்சலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ ஐயா நடிகர் மதுரை மோகன் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை “முண்டாசுப்பட்டி” படத்தின்மூலம் வாய்ப்பளித்த இயக்குநர் ரம்குமார் அறிமுகப்படுத்தினார்” என கூறியுள்ளார்.